சென்னை: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், 18 இணை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 3 துணை ஆணையர்களுக்கு பதவி உயர்வு வழங்கி புதிய பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதற்கான உத்தரவை இந்து சமய அறநிலையத் துறை செயலர் ராஜாராமன் வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முக்கிய கோயில்கள் மற்றும் அறநிலையத் துறை அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

முக்கிய கோயில்களில் புதிய அதிகாரிகள் நியமனம்
மதுரை துணை ஆணையராகப் பணியாற்றிய ஆர். பொன்சுவாமிநாதன், அழகர்கோவில் கள்ளழகர் கோயில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் துணை ஆணையராக இருந்த சி.நித்யா, திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் துணை ஆணையராக பணியாற்றிய மொ. அன்னக்கொடி, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் இணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முக்கிய பொறுப்புகளில் இடமாற்றம் ஏற்கெனவே இணை ஆணையர்களாக பணியாற்றி வந்த பல அதிகாரிகளும் வெவ்வேறு மாவட்டங்கள் மற்றும் கோயில்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் இணை ஆணையர் பா. விஜயா, சென்னை மண்டலம்-1 இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை இணை ஆணையர் அ. இரா. பிரகாஷ், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் இணை ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளார். ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையராக இருந்த என். சுரேஷ், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் இணை ஆணையர் எஸ். சிவராம்குமார், தஞ்சாவூர் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை இணை ஆணையர் சி. மாரியப்பன், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் மாற்றங்கள் இதுதவிர, சேலம், திருநெல்வேலி, திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், சென்னை மண்டலம்-3 உள்ளிட்ட நிர்வாக பிரிவுகளிலும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 18 இணை ஆணையர்களுக்கு பணியிட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், 3 துணை ஆணையர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியிட மாற்றங்கள் மூலம் கோயில்களின் நிர்வாகம், அலுவலக பணிகள் மற்றும் துறை சார்ந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளன. பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய பொறுப்புகளை ஏற்று பணியாற்ற உள்ளனர்.


0
0
0
0
0
0