தஞ்சாவூர்: காவல் பணியின்போது தங்களது இன்னுயிரை தியாகம் செய்த காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில், தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் நினைவு நாள் – வீர வணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துப்பாக்கி குண்டுகள் முழங்க உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில், தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் ஜியாவுல் ஹக், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், ஆகியோர் இணைந்து பணியின் போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடிய காவல் அதிகாரிகள், அவர்களது நலன் குறித்து கேட்டறிந்தனர். நாட்டின் பாதுகாப்பிற்காகவும், பொதுமக்களின் நலனுக்காகவும் பணியின்போது உயிரை தியாகம் செய்த காவலர்களின் சேவையையும் தியாகத்தையும் நினைவு கூரும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
