தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று தொடங்கும் சதய விழாவின் முதல் நாளில் திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக மாலை 6 மணிக்கு 1,041 நடன கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட நாட்டியாஞ்சலி நடைபெற உள்ளது. மேலும், மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் வரலாற்று நாடகமும் இடம்பெறுகிறது.
நாளை சிறப்பு அபிஷேகம், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
சதய விழாவின் இரண்டாம் நாளான நாளை (அக்டோபர் 22) காலை மங்கள இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. தொடர்ந்து, அரசு சார்பில் மாமன்னர் ராஜராஜ சோழனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. பின்னர் திருமுறை வீதி உலா, பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம், பெருந்தீப வழிபாடு உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலையில் பரதநாட்டியம், தேவார இசை, சொற்பொழிவுகள் மற்றும் பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வரலாற்று திருவிழா!
ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கும் தஞ்சை பெரிய கோயில், சோழர் கால கட்டிடக்கலையின் உச்சமாகவும், தமிழர்களின் கலை மற்றும் பண்பாட்டு பெருமையின் அடையாளமாகவும் திகழ்கிறது. இக்கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் நினைவை போற்றும் சதய விழா, அவரது ஆட்சி திறன், ஆன்மிக பற்று, கலைகளுக்கு அவர் அளித்த ஆதரவு ஆகியவற்றை இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வரலாற்று பெருவிழாவாக விளங்குகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் புகழை போற்றும் வகையில் நடைபெறும் 1041-வது சதய விழா, தமிழர் மரபையும் கலை பாரம்பரியத்தையும் கொண்டாடும் விழாவாக தஞ்சை மண்ணில் சிறப்பு பெறுகிறது.
-
தங்களின் பதிவு அருமை
