இ-வோட்டிங் முறைக்கு திடீர் மாற்றம் ஏன்? பணி நியமனம், இடமாற்றம், பணி நிரந்தரம், வெளியூர் அலவன்ஸ் என தொடரும் சர்ச்சைகள்
கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவன லிமிடெட்டில் (KMBF) புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்தல் நடைமுறை முதல் பணியாளர் நியமனம், இடமாற்றம், பணி நிரந்தரம், வெளியூர் அலவன்ஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவனத்தில் தலைவராக திமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. கல்யாணசுந்தரம் இருந்து வந்தார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததுடன், நிர்வாக இயக்குநராக வேலப்பன், முன்னாள் திமுகவை சேர்ந்த முன்னால் எம்.எல்.ஏ. அன்பழகன், கூடுதல் இயக்குநராக ரவிச்சந்திரன் உள்ளிட்டோரின் பதவிக்காலமும் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முதன்முறையாக இ-வோட்டிங் முறை பயன்படுத்தப்பட்டிருப்பது தற்போது பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
அரசியல் மாற்றத்துடன் மாறும் நிர்வாகமா?
KMBF நிறுவனத்தைப் பொறுத்தவரை, தமிழகத்தில் எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்தக் கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்கள் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் இடம்பெறுவது வழக்கமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும் நிறுவனத்தின் நிர்வாகத்திலும் மாற்றம் ஏற்படுகிறதா என்ற கேள்வியும் பங்குதாரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தற்போதைய தேர்தல் முடிவுகளும், புதிய நிர்வாகிகள் தேர்வும் நிறுவனத்தின் எதிர்கால நிர்வாகத்தை தீர்மானிக்கும் என்பதால், இந்த தேர்தல் மீது ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களின் கவனம் அதிகரித்துள்ளது.

KMBF தேர்தல் முறையில் திடீர் மாற்றம் ஏன்?
KMBF-ல் இதுவரை தேர்தல்கள் Manual Voting முறையில் நடைபெற்று வந்ததாக கூறப்படும் நிலையில், இந்த முறை திடீரென E-Voting முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது வெளிப்படைத்தன்மை மற்றும் விரைவான வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படலாம். ஆனால், ஏற்கனவே நடைமுறையில் இருந்த தேர்தல் முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து நிர்வாகம் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என பங்குதாரர்கள் வலியுறுத்துகின்றனர்.
குறிப்பாக, தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக முன்கூட்டியே ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு போதுமான விளக்கம் அளிக்கப்பட்டதா? இ-வோட்டிங் முறையை தேர்வு செய்தது யார்? அதற்கான நிர்வாக முடிவு எப்போது எடுக்கப்பட்டது? தேர்தல் நடைமுறை மாற்றத்திற்கு விதிமுறைகளின்படி தேவையான ஒப்புதல்கள் பெறப்பட்டனவா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
அதிருப்தியை சமாளிக்கவே இ-வோட்டிங்?
பொது மேலாளர் வெங்கடேசன், திமுக எம்.பி. கல்யாணசுந்தரம், வேலப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்கள் அதிருப்தியில் இருந்ததாகவும், இதனால் Manual Voting முறையில் தேர்தல் நடைபெற்றால் எதிர்பார்த்த தேர்தல் முடிவு கிடைக்காமல் போகலாம் என்ற அச்சத்திலேயே இ-வோட்டிங் முறைக்கு மாற்றப்பட்டதாகவும் சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.
இது தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மையா அல்லது தேர்தல் நடைமுறையை நவீனப்படுத்தும் நோக்கிலேயே இ-வோட்டிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டதா என்பது குறித்து நிர்வாகத்தின் விளக்கம் முக்கியமானதாகிறது.
தேர்தல் நடைமுறை மாற்றம் குறித்த முழுமையான விளக்கம் வெளியிடப்படுமா? என்பதே தற்போது எழும் முக்கியக் கேள்வியாக உள்ளது.
அதிக பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் அழைப்பா?
தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு அதிக அளவில் பங்குகளை வைத்திருந்த குறிப்பிட்ட பங்குதாரர்களை மட்டும் தேர்வு செய்து, தனியார் ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும் மற்றொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அந்தக் கூட்டத்திற்கு தற்போதைய நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படக்கூடியவர்கள் என கருதப்பட்ட பங்குதாரர்கள் மட்டுமே அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
KMBF தேர்தலில் பங்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குரிமை அல்லது வாக்கின் முக்கியத்துவம் இருக்கும் நிலையில், அதிக பங்குகளை வைத்திருப்பவர்களை ஒருங்கிணைத்து தேர்தலுக்கு முன்பாக ஆலோசனை நடத்தப்பட்டதன் நோக்கம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.

பணி நியமனம் முதல் இடமாற்றம் வரை;
நிர்வாகத்தைச் சுற்றி எழுந்துள்ள மற்றொரு முக்கியமான குற்றச்சாட்டு பணியாளர் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பானது. பணியிட நியமனங்களுக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணம் பெறப்பட்டதாகவும், பணியிட மாற்றத்திற்கும் குறிப்பிட்ட தொகை பெறப்பட்டதாகவும் சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்பதால், அவை உண்மையா என்பதை சுயாதீன விசாரணை மூலம் உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
பணி நியமனங்களில் பணம் பெறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆதாரங்கள் உள்ளனவா? பணம் செலுத்தியதாகக் கூறப்படும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா? கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற பணி நியமனங்களின் முழுமையான பட்டியல் தயாரிக்கப்பட்டதா? என்பதும் வெளிச்சத்திற்கு வர வேண்டிய கேள்விகளாக உள்ளன.
500-க்கும் மேற்பட்ட பணி நியமனங்களா?
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 500-க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக பணி நியமனம் வழங்கப்பட்டதாகவும், இந்த நியமனங்களின் பின்னணியில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்திருக்கலாம் என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும், நிர்வாகத்திற்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனக் கருதப்படுபவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து பதவிகள் வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் உண்மையா என்பதை அறிய கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து பணி நியமனங்களையும் ஆய்வு செய்வது அவசியமாகிறது. விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்?
தேர்வு செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்? தேர்வு செய்யப்பட்டவர்களின் தகுதி என்ன? தேர்வு நடைமுறை எப்படி இருந்தது?
பணி நியமனத்தில் வெளிப்படையான தேர்வு நடைபெற்றதா? என்ற கேள்விகளுக்கு விடை கிடைத்தால் மட்டுமே சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
நிர்வாகத்தை கேள்வி கேட்டால் தொலைதூர இடமாற்றமா?
நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் ஊழியர்கள் அல்லது நிர்வாகத்துடன் முரண்பாடு கொண்டவர்கள் தொலைதூரப் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் சில ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஒரு ஊழியரின் பணித் தேவையின் அடிப்படையிலா இடமாற்றம் செய்யப்படுகிறது அல்லது நிர்வாகத்தின் மீது அவர் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலா இடமாற்றம் செய்யப்படுகிறது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. இடமாற்ற உத்தரவுகள் அனைத்தும் ஒரே மாதிரியான விதிமுறைகளின் அடிப்படையில் பிறப்பிக்கப்படுகிறதா? குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கு மட்டும் அடிக்கடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

பணி நிரந்தரம் முதல் வெளியூர் அலவன்ஸ் வரை!
KMBF நிறுவனத்தில் பணியில் சேரும் ஊழியர்களுக்கு பயிற்சிக் காலம் முடிந்த பின்னர் பொதுவாக ஒரு ஆண்டுக்குள் பணி நிரந்தரம் செய்வது நடைமுறையாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட சில ஊழியர்களுக்கு 12 மாதங்களுக்குள் பணி நிரந்தரம் வழங்கப்படாமல், சுமார் 18 மாதங்கள் கழித்தே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்ட கால அளவு என்ன? என்ற கேள்வியும் எழுகிறது. அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே விதிமுறை பின்பற்றப்பட்டதா அல்லது ஆட்சி மற்றும் நிர்வாக மாற்றங்களுக்கு ஏற்ப விதிமுறைகள் மாறுபட்டனவா என்பது குறித்து நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என ஊழியர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
வெளியூரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.200 அலவன்ஸ்?
கல்யாணசுந்தரம் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் பணியில் சேர்ந்த ஊழியர்களில், வெளியூரில் தங்கி பணியாற்றுபவர்களுக்கு தினசரி ரூ.200 அலவன்ஸ் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த அலவன்ஸ் அனைத்து தகுதியான ஊழியர்களுக்கும் ஒரே விதிமுறையின் அடிப்படையில் வழங்கப்படுகிறதா அல்லது குறிப்பிட்ட காலகட்டத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறதா என்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். மேலும், இந்த அலவன்ஸ் தொடர்பாக நிர்வாகக் குழு முறையான தீர்மானம் எடுத்துள்ளதா? நிதி நிறுவனத்தின் கணக்குகளில் இந்த தொகை எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது? தகுதி நிர்ணயிக்கும் விதிமுறைகள் என்ன? என்பதும் முக்கியமான கேள்விகளாக உள்ளன.
தேர்தல் முடிந்தாலும் கேள்விகள் முடியவில்லை!
KMBF தேர்தல் முடிந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் நிலையில், தேர்தலின் வெற்றி-தோல்வியைத் தாண்டி நிறுவனத்தின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பணியாளர் நலன் மற்றும் பங்குதாரர்களின் உரிமைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
விசாரணை நடத்தப்படுமா?
KMBF என்பது தனிநபர்களின் நிறுவனம் மட்டுமல்ல; அதன் நிர்வாகம், பணியாளர் நியமனம், பங்குதாரர் உரிமைகள் மற்றும் நிதி நடவடிக்கைகள் அனைத்தும் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டியது அவசியம்.
தேர்தல் முடிவு அறிவிப்பிலும் பரபரப்பு!
KMBF தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோதும் நிறுவன வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலையயே இருந்துள்ளது. தேர்தல் முடிவில் கல்யாணசுந்தரம் மற்றும் அவரைச் சார்ந்த அணியினர் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அறிவிப்பு செல்லாது எனக்கூறி தவெக நிர்வாகிகள் ஆட்சேபனை தெரிவித்து கோஷமிட்டனர். இதன் காரணமாக வளாகத்தில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டதாகவும், அப்போது துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
நிறுவனத்தின் மாடியில் இருந்தவர்கள் யார்? குச்சிகள் எதற்காக?
KMBF தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில், பயிற்சிக்காக வந்த ஊழியர்கள் என்ற பெயரில், அதற்கான முறையான பயிற்சி அழைப்பாணை இல்லாமல் நிறுவனத்தின் மாடியில் பலர் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அந்த மாடியில் நூற்றுக்கும் மேற்பட்ட குச்சிகள் இருந்ததாக தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, அந்த குச்சிகள் கொடி கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்ததாக சில ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஒரு நிதி நிறுவனத்தின் அலுவலக வளாகத்தில், அதுவும் தேர்தல் முடிவு அறிவிக்கப்படவிருந்த நேரத்தில், கொடி கட்டுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட குச்சிகள் எதற்காக வைக்கப்பட்டிருந்தன? என்ற கேள்வி எழுந்துள்ளது.

காவல்துறை மீது பயிற்சி ஊழியர்கள் புகார்;
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி. தலைமையிலான காவல்துறையினரிடம், கட்டிடத்தின் மாடியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும், அவர்களால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, டி.எஸ்.பி. உத்தரவின் பேரில், மாடியில் இருந்தவர்களை காவல்துறையினர் கீழே அழைத்து வந்து வெளியே அனுப்பியுள்ளனர்.ஆனால், இதற்கு மாறாக, அன்றைய தினம் பயிற்சிக்காக வந்திருந்ததாக கூறப்படும் சில ஊழியர்கள் காவல்துறையினர் மீது வேறுவிதமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். தங்களை காவல்துறையினர் மாடியில் உள்ள அறையில் அடைத்து வைத்ததாகவும், வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், தங்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்கப்படவில்லை என்றும், இரவு சுமார் 11 மணியளவில்தான் வெளியே செல்ல அனுமதித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒருபுறம், மாடியில் இருந்தவர்களை பாதுகாப்பு காரணமாக காவல்துறையினர் வெளியேற்றிய நிலையில், மறுபுறம், தங்களை காவல்துறையினர்தான் அறைக்குள் அடைத்து வைத்ததாக சில பயிற்சி ஊழியர்கள் குற்றம் சாட்டுவது சம்பவம் தொடர்பாக மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எனவே, தற்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது உரிய கண்காணிப்பு அமைப்புகள் தேவையான ஆவணங்களை ஆய்வு செய்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் தரப்பில் எழும் எதிர்பார்ப்பாக உள்ளது.
KMBF நிர்வாகம் இது குறித்து தனது முழுமையான விளக்கத்தை வெளியிடுமா? என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
