கோவை மாவட்டத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது கூமாட்டி பழங்குடியின கிராமம். சுமார் 45 குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமத்தில், வீடு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக மக்கள் நீண்டகாலமாக போராடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

3 ஆண்டுகளாக பாதியில் நிற்கும் வீடுகள்

டாப்சிலிப் அருகே அமைந்துள்ள கூமாட்டி கிராமத்தில் 22 குடும்பங்களுக்காக புதிய வீடுகள் கட்டும் பணி தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஏற்கனவே உள்ள குடிசை வீடுகளில் வசித்து வரும் மக்கள், மழைக்காலங்களில் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக கூறுகின்றனர். கட்டுமானம் பாதியில் நிற்கும் புதிய வீடுகளிலும் கூரை அமைக்கப்படாததால், தகரச் சீட்டுகள் மற்றும் தார்ப்பாய்களை பயன்படுத்தி மழையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சில வீடுகளுக்கு கட்டுமானத்திற்காக குழிகள் தோண்டப்பட்ட நிலையிலேயே பணிகள் தொடங்கப்படவில்லை என்றும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

“இரவில் மண்ணெண்ணெய் விளக்குதான்!”

கூமாட்டி கிராமத்தில் வீடுகளுக்கு மின்சார வசதி இல்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். தெருக்களில் மட்டும் சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மழைக்காலங்களில் அவற்றின் பேட்டரிகளில் போதிய சார்ஜ் ஏறாததால் இரவு நேரங்களில் கிராமமே இருளில் மூழ்குவதாகவும் கூறுகின்றனர்.

வெயில் இருக்கும் நாட்களிலும் சோலார் விளக்குகள் சில மணி நேரம் மட்டுமே செயல்படுவதாகவும், வீடுகளில் இன்னும் மண்ணெண்ணெய் விளக்குகளையே பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

“தரமான வீடுகள், மின்சாரம் வேண்டும்!”

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பரமசிவம், கூமாட்டி கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ள வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கட்டுமானப் பணிகளின் தரம் குறித்தும் அவர் சந்தேகம் எழுப்பியுள்ளதுடன், மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான வீடுகளை அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கூமாட்டி கிராமத்திற்கு அருகிலேயே மானாம்பள்ளி பவர் ஹவுஸ் இருந்தும், அப்பகுதி வீடுகளுக்கு மின்சார வசதி இல்லாத நிலை தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதைவட மின் கம்பிகள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பதிவிலும் சிக்கல்?

இதனிடையே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் வால்பாறை நகராட்சியிலும், மற்றவர்கள் வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியிலும் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருப்பதால், வாக்களிப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கூமாட்டி பழங்குடியின கிராம மக்கள் அனைவரையும் ஒரே உள்ளாட்சி அமைப்பின் கீழ் வாக்காளர்களாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மழைக்கு ஒழுகும் குடிசைகள்... இருளில் மூழ்கும் வீடுகள்... பாதியில் நிற்கும் கட்டுமானங்கள்... அடிப்படை வசதிகளுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் கூமாட்டி பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?
0
0
0
0
0
0