கும்பகோணம்: அகில பாரத இந்து மகா சபா – தஞ்சாவூர் மாவட்டம் சார்பில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கும்பகோணம் கர்ண கொள்ளை தெருவில் அமைந்துள்ள சக்தி விநாயகர் செல்வகணபதி ஆலயத்தில் சப்தமாதா சஹித சிவபுத்ர மகா கணபதி திருவுருவ பிரதிஷ்டை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

மாநில பொதுச்செயலாளர் இராம. நிரஞ்சன் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழா, மகம் நட்சத்திரம், அமாவாசை, குருவாரம் என சிறப்பு வாய்ந்த காலத்தில் ஆன்மிக எழுச்சியுடன் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். ஒருங்கிணைந்த திருவுருவ அமைப்பு இப்பிரதிஷ்டையின் சிறப்பம்சமாக, சப்தமாதாக்கள் சிவலிங்கத்துடன் இணைந்த திருவுருவ அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 



மேலும், பரமேஸ்வரனின் திருவுருவத்தில் விநாயகர் நந்தி வாகனத்தில் அமர்ந்திருக்கும் பிரம்மாண்டமான திருவுருவமும், பிரம்மாண்டமான நந்தி பெருமானும் இணைந்து பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிவலிங்கம், சப்தமாதாக்கள், பரமேஸ்வரன், விநாயகர் மற்றும் நந்தி பெருமான் ஆகிய திருவுருவங்கள் ஒருங்கிணைந்து அமைக்கப்பட்டிருந்தது பக்தர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், ஆன்மிக உணர்வையும் பக்திப் பரவசத்தையும் ஏற்படுத்தியது.



நல்ல மாற்றத்திற்கான பிரார்த்தனை
கலியுகத்தில் ஆன்மிக எழுச்சி ஏற்பட்டு, மக்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இந்த திருப்பிரதிஷ்டை, பக்தர்களிடையே நம்பிக்கையையும் ஆன்மிக ஈடுபாட்டையும் ஏற்படுத்தியது. பக்தர்கள் தங்களது நல்ல பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் சிவபெருமான், சப்தமாதாக்கள் மற்றும் சிவபுத்ர மகா கணபதியை பக்தியுடன் வழிபட்டனர்.

மேலும், போதைப்பொருள் இல்லாத உலகம் அமைய வேண்டும்; போதை இல்லாத பாரதம் உருவாக வேண்டும்; பெண்களுக்கு எதிரான அநீதிகள் முற்றிலும் ஒழிய வேண்டும்; பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு பெருக வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
காவல்துறையினர் அனைவரும் பாதுகாப்புடனும் சிறப்புடனும் பணியாற்றுவதற்கு விநாயகர் அருள் துணைநிற்க வேண்டும் என்றும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.



பக்தர்களுக்கு பிரசாதம் – களிமண் விநாயகர் சிலைகள் வழங்கல்:
திருப்பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சக்கரைப் பொங்கல் மற்றும் சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும், பக்தர்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபடுவதற்காக களிமண் விநாயகர் சிலைகள் மற்றும் ஹேரம்ப கணபதி திருவுருவங்கள் அகில பாரத இந்து மகா சபா சார்பில் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஆலய பாதுகாப்புப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் முருகன் ஜி, தஞ்சை மண்டல தலைவர் ரமேஷ் ஜி, தஞ்சை மாவட்ட தலைவர் கராத்தே சங்கர் ஜி, தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர் தட்சிணாமூர்த்தி ஜி மற்றும் இந்து மகா சபாவின் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பக்தியுடன் வழிபாடு செய்து திருப்பிரதிஷ்டை விழாவை சிறப்பித்தனர்.

சிவபெருமான், சப்தமாதாக்கள் மற்றும் சிவபுத்ர மகா கணபதியின் அருளால் உலக மக்கள் அனைவருக்கும் அமைதி, நலம், வளம் பெருகட்டும் என விழாவில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
0
0
0
0
0
0