தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப்டம்பர் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் ராயலசீமா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகப் பகுதிகள் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எந்தெந்த நாட்களில் மழை?

செப்டம்பர் 10:
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 11:
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மீண்டும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 12:
மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 15ஆம் தேதி வட கடலோர தமிழகத்தின் சில பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35–36°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27–28°C அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, செப்டம்பர் 9 முதல் 13ஆம் தேதி வரை உள் தமிழகத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4°C வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0
0
0
0
0