சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். பழவேற்காடு முதல் கோவளம் வரையிலான மீனவ கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது.
சட்டசபையில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து, பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்”
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நெய்தல் மக்கள் கட்சித் தலைவர் கு. பாரதி, பட்டினப்பாக்கத்தைச் சுற்றி முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம், ராஜீவ் காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜ்புரம், டூமிங் குப்பம், நொச்சி நகர், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட 9 மீனவ கிராமங்கள் உள்ளதாகக் கூறியுள்ளார்.
புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் இந்த கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பட்டினப்பாக்கம், சாந்தோம், மயிலாப்பூர் பகுதிகளில் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மீன் தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்”
சென்னையில் முக்கியமான மீன் தொழில் நடைபெறும் பகுதிகளில் பட்டினப்பாக்கமும் ஒன்று எனக் கூறியுள்ள மீனவர் பிரதிநிதிகள், இப்பகுதியை மீன் தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மீனவர்களின் நலத்திட்டங்களுக்கு போதிய நிதி இல்லை என கூறப்படும் நிலையில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
செப்டம்பர் 15ல் முக்கிய ஆலோசனைக் கூட்டம்
பட்டினப்பாக்கம் சுற்றியுள்ள 9 மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்தகட்டமாக, பழவேற்காடு முதல் கோவளம் வரை உள்ள மீனவ கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் மீனவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
