தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விநாயகர் தலத்திற்கும் தனித்துவமான சிறப்பும், தலபுராணமும் உள்ளது. அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் அருள்பாலிக்கும் ‘கலங்காமல் காத்த விநாயகர்’ சிறப்புமிக்க கணபதி சந்நிதியாகப் போற்றப்படுகிறார்.
கும்பகோணம்–நீடாமங்கலம் சாலையில் அமைந்துள்ள ஆலங்குடி, கும்பகோணத்திலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவிலும், நீடாமங்கலத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
இங்குள்ள ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் குரு ஸ்தலமாகப் போற்றப்படுகிறது. ஜாதகத்தில் குரு தொடர்பான தோஷங்கள் இருப்பவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
‘கலங்காமல் காத்த விநாயகர்’ ஏன்?
ஆலய கோபுரத்தின் உட்புறத்தில் அருள்பாலிக்கும் விநாயகர், ‘கலங்காமல் காத்த விநாயகர்’ என்ற திருநாமத்துடன் விளங்குகிறார். தலபுராணத்தின்படி, உலகம் பெரும் ஆபத்தை எதிர்கொண்டபோது தேவர்களையும் மக்களையும் காத்தருளியதால் அவருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கஜாசுரனை அடக்கிய கணபதி
மாகத முனிவருக்கும் விபூதி என்ற அசுரப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்த கஜாசுரன், கடுமையான தவம் செய்து சிவபெருமானிடம் பல்வேறு வரங்களைப் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.
வரத்தின் வலிமையால் ஆணவம் கொண்ட கஜாசுரன், தேவர்களையும் மக்களையும் துன்புறுத்தியதாகவும், அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியதாகவும் ஐதிகம்.
ஒருமுறை விண்ணுலகில் சென்றபோது அண்டச் சுவரை கஜாசுரன் சேதப்படுத்தியதாகவும், அதன் காரணமாக ஆகாய கங்கை பெருக்கெடுத்து பூலோகத்தை வெள்ளத்தில் மூழ்கடித்ததாகவும் தலபுராணம் கூறுகிறது.
அப்போது தேவர்கள் ஆலங்குடியில் அருளும் விநாயகரை வேண்டியதாகவும், அவர்களின் பிரார்த்தனையை ஏற்ற கணபதி தனது தும்பிக்கையால் பெருக்கெடுத்த நீரை உறிஞ்சி, தனது கால் பெருவிரலால் அண்டச் சுவரின் உடைப்பை அடைத்ததாகவும் நம்பப்படுகிறது.
இதையடுத்து கஜாசுரனை அழிக்கப் புறப்பட்ட விநாயகர், அவனுடன் போரிட்டு அவனை அடக்கியதாகவும், இறுதியில் அவன் பெருச்சாளி வடிவம் எடுத்து விநாயகரின் வாகனமாக மாறியதாகவும் தலபுராணம் தெரிவிக்கிறது.
வழிபட்டால் என்ன பலன்?
கஜாசுரனை அடக்கி அனைவரையும் காத்ததால், இத்தல விநாயகருக்கு ‘கலங்காமல் காத்த விநாயகர்’ என்ற திருநாமம் ஏற்பட்டதாக ஐதிகம்.
இந்த விநாயகரை தரிசித்து, சந்நிதியில் தோப்புக்கரணம் செய்து வழிபடுவது சிறப்பு என பக்தர்கள் கருதுகின்றனர். தொடர்ந்து 11 வாரங்கள் விநாயகரை நினைத்து வழிபடுவதும், சதுர்த்தி நாளில் கொழுக்கட்டை நிவேதனம் செய்வதும் விசேஷம் என கூறப்படுகிறது.
சத்ரு பயம் நீங்குதல், வம்பு மற்றும் வழக்கு பிரச்னைகள் விலகுதல், மனக்கலக்கம் குறைந்து நிம்மதி கிடைத்தல் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வாழ்வில் ஏற்படும் கலக்கங்கள் நீங்கி, மனதில் நிம்மதி நிலைக்க வேண்டும் என விரும்புபவர்கள் ஆலங்குடி சென்று ‘கலங்காமல் காத்த விநாயகரை’ தரிசித்து வழிபடலாம்.
