“என் குடும்பத்திற்கு நன்றி” – ஜேசன் சஞ்சய் பேசியதும் ‘TVK.. TVK..’ என ஆரவாரம் செய்த மாணவர்கள்!
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ‘சிக்மா’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட் செப்டம்பர் 9ஆம் தேதி சேலத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் மேடையேறி பேசிய ஜேசன் சஞ்சய், தனது உரையை தொடங்கும்போது “என் குடும்பத்திற்கு நன்றி” எனக் குறிப்பிட்டார். அப்போது அரங்கில் இருந்த மாணவர்கள் மற்றும் ரசிகர்கள் “TVK.. TVK..” என ஆரவாரம் செய்தனர்.

தொடர்ந்து பேசிய ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ தனது முதல் படம் என்றும், வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கட்டத்தில் மிகப்பெரிய சிக்கலை எதிர்கொண்டு எடுக்கும் ஒரு முடிவு அவர்களின் வாழ்க்கையையே மாற்றும் என்றும் கூறினார்.

அத்தகைய ஒரு தருணத்தை மையமாகக் கொண்ட மனிதனின் வாழ்க்கைக் கதையே ‘சிக்மா’ என தெரிவித்த அவர், இந்தப் படம் அனைவராலும் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் சென்று படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், படம் பிடித்திருந்தால் மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஜேசன் சஞ்சய் கேட்டுக்கொண்டார்.

ஜேசன் சஞ்சய் மேடையில் பேசியபோது மாணவர்கள் எழுப்பிய ‘TVK’ முழக்கம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
0
0
0
0
0
0