தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: பாஜகவிடம் ஆதரவு கேட்ட அதிமுக!

Bypolls | AIADMK–BJP: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு பாஜகவிடம் அதிமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில், தேர்தல் தொடர்பான வழக்குகள் இல்லாத தாராபுரம் (தனி), மதுராந்தகம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும்.

இந்த இரு தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிட அதிமுக தயாராகி வருகிறது. இதற்கான விருப்ப மனுக்கள் அதிமுகவில் நேற்று முதல் பெறப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 10ஆம் தேதி மாலை வரை விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன.

பாஜகவிடம் ஆதரவு கேட்ட அதிமுக

இதனிடையே, அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ். மணியன், சொரத்தூர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு சென்றனர்.

அங்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த அவர்கள், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாஜக ஆதரவு வழங்க வேண்டும் எனக் கோரி கடிதம் அளித்தனர்.

இடைத்தேர்தல் அட்டவணை
வேட்புமனு தாக்கல் தொடக்கம்: செப்டம்பர் 9
வேட்புமனு தாக்கல் கடைசி நாள்: செப்டம்பர் 16
வேட்புமனு பரிசீலனை: செப்டம்பர் 17
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்: செப்டம்பர் 19
வாக்குப்பதிவு: அக்டோபர் 6
வாக்கு எண்ணிக்கை: அக்டோபர் 9
கடந்த தேர்தல் முடிவுகள்

தாராபுரம் (தனி):
அதிமுகவின் பி. சத்யபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் 64,373 வாக்குகளும், தவெக வேட்பாளர் 46,438 வாக்குகளும் பெற்றனர். வெற்றி வித்தியாசம் 16,727 வாக்குகள்.

மதுராந்தகம் (தனி):
அதிமுகவின் கே. மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் 62,090 வாக்குகளும், திமுக வேட்பாளர் 59,838 வாக்குகளும் பெற்றனர். வெற்றி வித்தியாசம் 7,194 வாக்குகள்.

இந்நிலையில், இந்த இரு இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்குமா என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0
0
0
0
0