45.7 கிலோ உடல் எடை கொண்ட இந்திய பவர்லிஃப்டர் கேயா குணால் பானர்ஜி, 140 கிலோ Deadlift தூக்கி உலகளவில் கவனம் பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்காவின் Sun City-யில் நடைபெற்ற 2026 IPF World Sub-Junior & Junior Classic Powerlifting Championships போட்டியில் இந்த சாதனையை அவர் பதிவு செய்தார்.
21 வயதான கேயா, Junior Women’s 47 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்றார். போட்டியில் 90 கிலோ Squat, 50 கிலோ Bench Press, 140 கிலோ Deadlift என மொத்தம் 280 கிலோ எடையைத் தூக்கினார். இதில் 140 கிலோ Deadlift-க்கு வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், ஒட்டுமொத்த பிரிவில் 5-வது இடத்தையும் பிடித்தார்.
தனது உடல் எடையைவிட மூன்று மடங்குக்கும் அதிகமான எடையை கேயா தூக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது. அவரது அபாரமான வலிமை மற்றும் சாதனைக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
ஆனால், வைரலுக்கு பின்னால் அதிர்ச்சி!
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, கேயா ஆன்லைன் பாலியல் தொல்லை மற்றும் போலி சமூக வலைதளக் கணக்குகள் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தனது முகம் மற்றும் உடலைப் பயன்படுத்தி, தன்னுடைய அனுமதியின்றி ஆயிரக்கணக்கான AI படங்கள் உருவாக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் அதிகமான புகைப்படங்களைப் பகிராத நிலையிலும், தனது புகைப்படங்களை வைத்து இத்தகைய AI உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட்டது தனக்கு அதிர்ச்சியளித்ததாக கேயா தெரிவித்துள்ளார்.
“ஒரு Deadlift செய்யும் பெண்ணாக இருக்க விரும்புகிறேன்!”
இந்த அனுபவங்களுக்கு மத்தியில், தனது புகழை விட விளையாட்டு சாதனைகளுக்கே முக்கியத்துவம் அளிப்பதாக கேயா தெரிவித்துள்ளார். பவர்லிஃப்டிங்கை விரும்பும் ஒரு பெண்ணாக இயல்பாக இருக்க விரும்புவதாகவும், தனது தோற்றத்தை மையமாகக் கொண்ட தேவையற்ற கவனத்தைவிட தனது விளையாட்டு திறமையே பேசப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
140 கிலோ Deadlift தூக்கி பதக்கம் வென்ற கேயா பானர்ஜியின் பயணம், ஒரு விளையாட்டு சாதனையாக மட்டுமல்லாமல், AI தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் பெண்களின் டிஜிட்டல் தனியுரிமை எதிர்கொள்ளும் சவால்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
