நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயப் பயணத்தையும், சர்வதேச பந்தயக் களங்களில் அவர் எதிர்கொண்ட சவால்களையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

ட்ரெய்லரில் அஜித்தின் மனைவி ஷாலினி, அவர் கார் பந்தயத்தில் ஈடுபடும்போது தனக்கு ஏற்படும் பதற்றம் குறித்தும், அதே நேரத்தில் தனது கனவை நோக்கி தீவிரமாக பயணிக்கும் அஜித்துக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பது குறித்தும் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

மேலும், அஜித்தின் மகன் மற்றும் மகளும் தங்களது தந்தையின் உழைப்பு, முயற்சி மற்றும் வாழ்க்கை குறித்த தங்களது பார்வைகளை பகிர்ந்துள்ளனர்.

வெறும் வெற்றிக்காகவோ, கோப்பைகளை வெல்வதற்காகவோ மட்டுமல்லாமல், “சாத்தியமற்றது என்று எதுவும் இல்லை என்பதை நிரூபிக்கும் அந்த சில நொடிகளுக்காகவே” அஜித் பந்தயக் களத்தில் இருப்பதாக ட்ரெய்லரில் தெரிவிக்கப்படுகிறது.

அதிவேக கார் பந்தயக் காட்சிகள், விபத்துகள், பரபரப்பான திருப்பங்கள் என ரசிகர்களை சீட் நுனியில் அமர வைக்கும் வகையில் ட்ரெய்லர் உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது.

ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இந்த ஆவணப்படத்தை ஷாலினி வெளியிடுகிறார். நவம்பர் மாதம் இப்படம் திரைக்கு வர உள்ளது.

இதன் ட்ரெய்லரை ரோகிணி திரையரங்கில் இயக்குநர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஏ.எல். விஜய் ரசிகர்களுடன் இணைந்து கண்டு ரசித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.எல். விஜய், பெரிய படைப்புக்கு வித்தியாசமான மார்க்கெட்டிங் அணுகுமுறை தேவை என்றும், சிறுவயதில் செய்யத் தவறிய விஷயங்களைத் தேடி அலைவது மனித வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அஜித்தின் கார் ரேசிங் உலகத்தை இதுவரை ரசிகர்கள் பார்க்காத கோணத்தில் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
0
0
0
0
0
0