தமிழக சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த கார் மோதி 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையம் தொகுதியில் இருந்து தவெக சார்பில் வெற்றி பெற்ற ஜெகதீஸ்வரி, முதல்வர் விஜய் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக உள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அவர் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரின் வாகன அணிவகுப்பில் முன்னால் பாதுகாப்பு வாகனமும், பின்னால் அவரது பெயரில் பதிவு செய்யப்பட்ட சொந்த காரும் சென்றதாக கூறப்படுகிறது. சென்னை காட்டாங்குளத்தூர் அருகே வந்தபோது, பின்னால் வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் இறையன்பு (26) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்தில் தொடர்புடைய அமைச்சரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை ஓட்டி வந்த ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அமைச்சரின் சொந்த கார் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0
0
0
0
0