கைரளி தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற ‘டாக்டர்ஸ் அவார்ட்’ விழாவில் நடிகர் மம்மூட்டி கலந்துகொண்டு, தனது மருத்துவ அனுபவம் மற்றும் மருத்துவர்கள்–நோயாளிகள் இடையேயான உறவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய மம்மூட்டி, “நான் பல ஆண்டுகளாக ஒரு நோயாளியாக இருந்தேன். தற்போது அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டேன் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார். தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை நன்றியுடன் நினைவுகூர்வதாகவும் அவர் கூறினார்.
தான் ஒரு பிரபலமாக இருந்தபோதிலும், மருத்துவர்கள் தன்னை மற்ற நோயாளிகளிடமிருந்து தனித்துவமாக நடத்தவில்லை என்றும், தனது உடல்நிலை குறித்து அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் ஒருபோதும் பேசியதில்லை என்றும் மம்மூட்டி குறிப்பிட்டார்.
மேலும், கடுமையான நோய் ஏற்படும்போது ஆரம்பத்தில் பயமும் மன உளைச்சலும் ஏற்படுவது இயல்பானது என்றும், அந்த நேரத்தில் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையேயான நம்பிக்கையான உறவு மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, மம்மூட்டியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது தரப்பில் குறிப்பிட்ட நோய் குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. இந்நிலையில், நிகழ்ச்சியில் அவர் தனது மருத்துவ அனுபவம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
