சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் முதலமைச்சர் அலுவலகத்தை அமைக்கும் பணிக்கான டெண்டரில், சென்னை ராசி பில்டர்ஸ் நிறுவனம் L1 நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கக் கடலை நோக்கிய வகையில் முதலமைச்சர் அலுவலகத்தை நவீன முறையில் புதுப்பிக்கும் பணிக்காக பொதுப்பணித்துறை டெண்டர் கோரியிருந்தது. இந்த பணிக்கான அரசு மதிப்பீடு ரூ.5.54 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களில் ராசி பில்டர்ஸ் நிறுவனம், அரசு மதிப்பீட்டுத் தொகையை விட 32 சதவிகிதம் குறைவான தொகையை குறிப்பிட்டு டெண்டர் கோரியதாகவும், குறைந்த தொகையை குறிப்பிட்ட நிறுவனமாக (L1) தேர்வாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெண்டர் போட்டியில் ஈஸ்வரி கன்ஸ்ட்ரக்ஷன், எம் கியூப் இன்ஃப்ரா மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா பில்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

இதன் மூலம், முதலமைச்சர் அலுவலகத்தை நவீன முறையில் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
0
0
0
0
0