நடிகை த்ரிஷா கடந்த சில நாட்களாக லண்டனில் இருந்து வருகிறார். அவர் லண்டனில் இருப்பது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பல்வேறு யூகங்களை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் அங்கு சென்றதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

இயக்குநர் ராஜா கிருஷ்ணன் மேனன் இயக்கும் புதிய உளவியல் திகில் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காகவே த்ரிஷா லண்டன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

இந்த திரைப்படத்தில் த்ரிஷாவுடன் ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க பெண்களை மையமாகக் கொண்ட கதையாக இப்படம் உருவாகிறது.

‘ஏர்லிஃப்ட்’, ‘செஃப்’, ‘பிப்ஃபா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜா கிருஷ்ணன் மேனனுக்கு, இது முதல் தமிழ் திரைப்படமாகும்.

பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றனர். முன்னணி நடிகைகளான த்ரிஷா, ராதிகா மற்றும் அபர்ணா பாலமுரளியுடன் பணியாற்றுவது உற்சாகமாக இருப்பதாக இயக்குநர் ராஜா கிருஷ்ணன் மேனன் தெரிவித்துள்ளார்.

த்ரிஷாவின் புதிய அவதாரத்தில் உருவாகும் இந்த உளவியல் திகில் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
0
0
0
0
0
0