மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா அழைப்பிதழில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறாத விவகாரம் தொடர்பான வழக்கில், அறநிலையத்துறை குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சரவணன் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழில் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை எனக்கூறி, அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலட்சுமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த விவகாரம் இன்று விசாரணைக்கு வந்தபோது, அறங்காவலர் குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திலக்குமார், கடந்த காலங்களில் நடைபெற்ற குடமுழுக்கு விழா அழைப்பிதழ்களில் அறங்காவலர் குழுவினரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாகவும், தற்போதைய நடைமுறை கண்டிக்கத்தக்கது என்றும் வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி சரவணன், அறங்காவலர்கள் பெயர் அழைப்பிதழில் விடுபட்டது தவறு எனக் கூறினார். மேலும், குடமுழுக்கு விழா முடிந்த பிறகு கோயிலில் வைக்கப்படும் கல்வெட்டில் அறங்காவலர் குழுவின் பெயர்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், “மக்கள் அமைதியைத் தேடி வரும் இடம்தான் கோயில்கள். இந்த இடத்தில் அறநிலையத்துறை அரசியல் செய்வது வருத்தத்திற்குரியது. இது ஏற்கத்தக்கது அல்ல” என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மத வழிபாட்டுத் தலங்களில் எதிர்காலத்தில் எந்தவிதமான அரசியல் நிகழ்வுகளும் இருக்கக் கூடாது என்றும், கோயில் நிகழ்ச்சிகள் விதிமுறைகளின்படி நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.

இதையடுத்து, உரிய உத்தரவுகளை பிறப்பித்து வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.
0
0
0
0
0
0