நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் காரணமாக, நாட்டின் மற்ற பகுதிகளுக்குச் சுற்றுலா செல்வதை வெளிநாட்டுப் பயணிகள் தவிர்த்துவிட வேண்டாம் என நடிகை மணீஷா கொய்ராலா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காத்மாண்டுவில் நடைபெற்ற “நேபாள மக்களுடன் ஒருமைப்பாடு” நிகழ்ச்சியில் பேசிய அவர், தொடர்ந்து ஏற்படும் இயற்கைப் பேரிடர்களால் நேபாள மக்கள் எதிர்கொள்ளும் வேதனையை விவரித்தார்.

“இந்த வலி மிகப் பெரியது. என்ன பேசுவது, எப்படி நடந்துகொள்வது என்றே தெரியவில்லை. ஆனால் பிரச்சினைகளை எதிர்கொண்டு, நம்மிடம் உள்ள அத்தனை வலிமையையும் ஒன்றுதிரட்டி சிறு சிறு அடிகளாக முன்னேறுவதைத் தவிர வேறு வழியில்லை” என அவர் தெரிவித்தார்.

???? உலக வெப்பமயமாதல் குறித்து கவலை

உலக வெப்பமயமாதல் என்பது தொலைவில் நடக்கும் விஷயம் அல்ல என்றும், அதன் தாக்கத்தை நேபாள மக்கள் நேரடியாக எதிர்கொண்டு வருவதாகவும் மணீஷா கொய்ராலா குறிப்பிட்டார்.

மேலும், சீனா, இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு, இதுபோன்ற பேரிடர்களைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

✈️ “நேபாளத்தை ஒதுக்கிவிடாதீர்கள்!”

சர்வதேச சமூகத்தினருக்கு அவர் விடுத்த முக்கிய வேண்டுகோளில், “நேபாளத்தின் ஒரு பகுதியில் பேரழிவு ஏற்பட்டுள்ளது என்பதற்காக, நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நினைத்து சுற்றுலாவைத் தவிர்க்காதீர்கள்” என கேட்டுக்கொண்டார்.

“சுற்றுலாதான் நேபாளத்தின் உயிர்மூச்சு. தொடர்ந்து எங்கள் நாட்டிற்கு பயணம் செய்யுங்கள். நேபாளம் பேரிடர்களுக்காக அல்ல; இமயமலை, இயற்கை அழகு, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அன்பான மக்களுக்காக அறியப்பட வேண்டும்” என அவர் உருக்கமாக தெரிவித்தார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாளம் விரைவில் மீண்டு வர வேண்டும் என்பதே தற்போது தன்னுடைய மிகப்பெரிய நம்பிக்கை என்றும் மணீஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.
0
0
0
0
0
0