திமுக ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 31) திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதத்தில், மாவட்ட பொறுப்பாளர் மற்றும் பெருந்துறை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், மாவட்ட கழக செயல்பாடுகள் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது தனக்கும் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் தனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இனியும் திமுகவில் தொடர தனது மனம் இடம் கொடுக்கவில்லை எனக் கூறி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தோப்பு வெங்கடாச்சலம், “தற்போதைய சூழலில் வேறு எந்தக் கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை. அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
