இந்திய இசை உலகின் பழம்பெரும் பின்னணி பாடகியான ஆஷா போஸ்லே பாடிய கடைசி பாடல், அவரது பிறந்தநாளான செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாக உள்ளது.தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் சுமார் 12 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள ஆஷா போஸ்லே, தனது தனித்துவமான குரலால் பல தலைமுறை ரசிகர்களை கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல பிரபல பாடல்களை அவர் பாடியுள்ளார்.

தமிழில் மறக்க முடியாத பாடல்கள்

‘ஹேராம்’ படத்தில் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி, ‘மீரா’ படத்தில் ஓ பட்டர்ஃப்ளை, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் செண்பகமே செண்பகமே, ‘அலைபாயுதே’ படத்தில் செப்டம்பர் மாதம், ‘சந்திரமுகி’ படத்தில் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், ‘நேருக்கு நேர்’ படத்தில் எங்கெங்கே எங்கெங்கே உள்ளிட்ட பல பிரபலமான பாடல்களை ஆஷா போஸ்லே பாடியுள்ளார்.

90 வயதில் பதிவு செய்யப்பட்ட கடைசி பாடல்

ஆஷா போஸ்லே தனது 90வது வயதில், 2023ஆம் ஆண்டு ‘ஓம் கா ஹரி’ திரைப்படத்திற்காக ஏ மேரி ஜிந்தகி து சுபி ஹை கஹானி என்ற பாடலை பதிவு செய்திருந்தார்.

தந்தை - மகன் உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் ஹரிஷ் வியாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலே ஆஷா போஸ்லே பாடிய கடைசி பாடலாக அமைந்துள்ளது.

பிறந்தநாளில் சிறப்பு வெளியீடு

ஆஷா போஸ்லேவின் நினைவைப் போற்றும் வகையில், அவரது கடைசி பாடலை அவர் பிறந்தநாளான செப்டம்பர் 8ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து இயக்குநர் ஹரிஷ் வியாஸ் கூறுகையில், ஆஷா போஸ்லேவின் காலத்தால் அழியாத குரலில் பதிவு செய்யப்பட்ட இந்தப் பாடல், அவரை சிறப்பிக்கும் வகையில் அவரது பிறந்தநாளில் வெளியிடப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இசை ரசிகர்களுக்கு ஆஷா போஸ்லேவின் இந்த கடைசி பாடல், அவரது குரலையும் இசைப் பயணத்தையும் மீண்டும் நினைவுகூரும் ஒரு சிறப்பு தருணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
0
0
0
0
0