தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தாலும், அதன் அடிப்படையில் மட்டும் தனது தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது என்று முதலமைச்சர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.முதல்வர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார்.இந்நிலையில், அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து பெரம்பூர் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளைத் தொடர்ந்தனர்.
நிராகரிப்பு மனு தாக்கல்
இந்த வழக்கு கடந்த 25ஆம் தேதி நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரும் மனுவை தாக்கல் செய்ய விஜய் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.ஆனால், இதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்ததுடன், ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குள் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, தமக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக் கோரி முதலமைச்சர் விஜய் தரப்பில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
“குழந்தைகளை பயன்படுத்தியிருந்தாலும் வெற்றியை ரத்து செய்ய முடியாது”
விஜய் தாக்கல் செய்துள்ள மனுவில், தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை என எடுத்துக்கொண்டாலும், அதன் அடிப்படையில் மட்டும் தனது தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், குழந்தைகளை பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் செயலால் தனக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன அல்லது தேர்தல் முடிவு எந்த வகையில் பாதிக்கப்பட்டது என்பதற்கான அடிப்படை ஆதாரங்களை மனுதாரர்கள் முன்வைக்கவில்லை என்றும் விஜய் தரப்பு குறிப்பிட்டுள்ளது.வாக்காளர்களின் உணர்வுகளைத் தூண்டியதாகவோ, அதன் காரணமாக எதிர்மனுதாரரின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டதாகவோ கூறுவது மட்டுமே தேர்தல் வெற்றியை ரத்து செய்வதற்குப் போதுமான காரணமாகாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவு, வெளிநாட்டு நிதி குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு
தேர்தல் செலவு கணக்கை மறைத்ததாகவும், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்றதை மறைத்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவொரு ஆதாரமும் இல்லை என விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.
அதேபோல், வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்கள் இல்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் வெற்றியை ரத்து செய்வதற்கான முதன்மையான காரணங்களை தெளிவாக குறிப்பிடாமல், தேர்தல் சட்டப் பிரிவுகளை மட்டும் மேற்கோள் காட்டுவதும், ‘கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது’, ‘மறைக்கப்பட்டுள்ளது’, ‘ஊழல் நடவடிக்கை’ போன்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதும் வழக்கைத் தொடர போதுமான அடிப்படையாக அமையாது என்றும் விஜய் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31-ல் விசாரணை?
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு எதிராக தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கு வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் தனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கும் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
தேர்தல் பிரச்சார குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வெற்றி ரத்து செய்யப்படுமா அல்லது வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்படுமா என்பதில் சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
