நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணித்து ஒருங்கிணைக்கும் வகையில் தமிழக அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பனிப்பாறை சரிவால் போதேகோசி நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் கரையோர கட்டிடங்கள், பாலங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த பேரழிவில் 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாயம்:
இந்தப் பெருவெள்ளத்தில் சிக்கிய இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, ஏராளமான தமிழர்களும் நேபாளத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், அவர்களை பத்திரமாக மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆஷிஷ் குமார், ஐஏஎஸ் தலைமையிலான சிறப்புக் குழுவை காட்மாண்டுவுக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியில் முகாமிட்டுள்ள  அமைச்சர்கள்:
முதல்வரின் உத்தரவின்பேரில், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.அங்கிருந்து மத்திய அரசின் அதிகாரிகள் மற்றும் நேபாளத்தில் செயல்பட்டு வரும் மீட்புக் குழுக்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறை:
இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர்கள் ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.அங்கு பெறப்படும் தொலைபேசி அழைப்புகள், தமிழர்கள் தொடர்பான தகவல் சேகரிப்பு, உதவி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு குறித்து அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டறிந்தனர்.

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து தொடர்ந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீட்க தமிழக அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
0
0
0
0
0
0