கும்பகோணம்: தொகுதி மறுவரையறையை கண்டித்து தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று, தொகுதி மறுவரையறை தொடர்பான தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்ற அச்சம் பல்வேறு தரப்பினரிடையே நிலவி வருகிறது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற அமைதி பேரணிக்கு மாவட்ட தலைவர் குமரன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் லோகநாதன், மேயர் சரவணன், நகரத் தலைவர் மிர்சாதீன் ஆகியோர் முன்னிலையில் கண்டன அமைதி பேரணி நடைபெற்றது.
இதில், மாநில, மாவட்ட, வட்டார, நகர, பேரூர், மகிளா காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள் “REJECT MODI DELIMITATION” என அச்சிடப்பட்ட கருப்பு பலூன்களை ஏந்தியபடி தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்றும், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு தண்டனை அளிக்கும் வகையில் மறுவரையறை அமையக் கூடாது என்றும் வலியுறுத்தினர்.
தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கக்கூடாது, குடும்ப கட்டுப்பாடு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றம் கண்ட தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
இதனால், தொகுதி மறுவரையறை நடவடிக்கையில் மாநிலங்களின் பங்களிப்பு, மக்கள் தொகை கட்டுப்பாட்டில் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் மாநிலங்களின் உரிமைகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், தொகுதி மறுவரையறை என்பது வெறும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எல்லைகளை மாற்றும் நடவடிக்கை மட்டுமல்ல என்றும், அது ஒவ்வொரு மாநிலத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் எதிர்கால அரசியல் அதிகார சமநிலையையும் தீர்மானிக்கக்கூடிய முக்கியமான விவகாரம் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற அமைதி பேரணி, தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், மாநிலத்தின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
