திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, இராசாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் நந்தகுமார், வயது 42,  இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மணிவேல் என்பவர் தனது கிராமத்தில் உள்ள நிலத்தை பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து, மண்ணச்சநல்லூர் தாலுகா இராசாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் தி நந்தகுமார், கடந்த 5ம் தேதி அன்று திருமணிவேலை சந்தித்து, பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.3,000 லஞ்சமாக கேட்டுள்ளார். பின்னர் புகார்தாரரின் வேண்டுகோளின் பேரில் லஞ்சத் தொகையை ரூ.2,000 ஆக குறைத்துள்ளார்.

இதுகுறித்து மணிவேல் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இன்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், காவல் ஆய்வாளர்கள் சேவியர் ராணி, ஆகாஷ் ஆகியோர் தலைமையில் சோதனை நடைபெற்றது.

அப்போது, புகார்தாரரிடம் இருந்து ரூ.2,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் நந்தகுமாரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 

தொடர்ந்து, இராசாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0
0
0
0
0