டெல்லி: நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். தேச விரோத சக்திகள் இந்த சூழலை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்றும் இதன் காரணமாகவே தான் பதவியை ராஜினாமா செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீட் முறைகேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருக்கிறார். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக மாணவர்கள் இதை வலியுறுத்தியே போராட்டம் நடத்தி வந்த நிலையில், மாணவர் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது.
தனது ராஜினாமா தொடர்பாக தர்மேந்திர பிரதான் இது இந்தியில் கடிதம் ஒன்றையும் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். "என் இளம் நண்பர்களே..." என்று தொடங்கும் தனது கடிதத்தில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி, மாணவர்கள் மற்றும் கல்வி சீர்திருத்தத்திற்காக பணியாற்றி வருவதாக தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும், "வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய, தொலைநோக்குப் பார்வையுள்ள கல்வி அமைப்பே வலுவான இந்தியாவின் அடித்தளம் என்று நான் எப்போதும் நம்பியிருக்கிறேன். நாட்டின் இளைஞர்களின் கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் நான் மதிக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாட்டுக்கு சேவை செய்ய வாய்ப்பு வழங்கியதற்கு அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2026 மே 3ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்டவுடன், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் கணினி வழி தேர்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கான மறு தேர்வை எந்த பிரச்சினையும் இல்லாமல் நடத்துவதே அரசின் முதல் இலக்காக இருந்தது. மத்திய அரசு, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் ஜூன் 21ஆம் தேதி அந்த தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த விவகாரத்திற்கு முதல் நாளே நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். தேர்வு மாஃபியாக்களால் எந்த திறமையான மாணவரின் எதிர்காலமும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். நீட் தேர்வில் ஏழை பின்னணியை சேர்ந்த பல மாணவர்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரத்தில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் சிலர் மாணவர்களை தவறாக வழிநடத்தி குழப்பத்தை ஏற்படுத்த முயன்றது எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது.
கடந்த 10 நாட்களாக நடந்த சம்பவங்கள் தன்னை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. இது என்னுடைய தனிப்பட்ட கௌரவம் பற்றிய பிரச்சினை அல்ல. இந்தியாவின் உண்மையான பலமாக இருக்கும் இளைஞர்கள் குழப்பத்தில் சிக்கக் கூடாது என்பதே என் விருப்பம். ஜந்தர் மந்தர் மற்றும் நாடு முழுவதும் உருவாகியுள்ள சூழலைக் கருத்தில் கொண்டே ராஜினாமா செய்துள்ளேன்.
தேச விரோத சக்திகள் இந்த சூழலை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு மாணவரின் எதிர்காலம் கூட சட்ட சிக்கலில் சிக்கக் கூடாது. நமது குழந்தைகள் போராட்டங்களில் நேரத்தை செலவிடாமல், படிப்பிலும் எதிர்காலத்தை உருவாக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இதை கருத்தில் கொண்டே நான் எனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
உண்மைநிலையை உணர்ந்தும் நாட்டின் எதிர்காலம் மற்றும் மாணவர்களின் நலம் காக்கப்பட விட்டுக்கொடுத்து தன் நலம் பாராத ப்ரான் பாராட்டப்பட வேண்டியவரா
-
உண்மைநிலையை உணர்ந்தும் நாட்டின் எதிர்காலம் மற்றும் மாணவர்களின் நலம் காக்கப்பட விட்டுக்கொடுத்து தன் நலம் பாராப்ரதான்பாராட்டப்பட வேண்டியவர்
