அகில பாரத இந்து மகா சபா – தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் இராம.நிரஞ்சன் தலைமையில், உலக நலன், எல் நினோ உள்ளிட்ட காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டுள்ள கடும் வெப்பத்தின் தாக்கம் குறையவும், உலகம் முழுவதும் பருவமழை பொழிந்து நீர்நிலைகள் நிரம்பவும், விவசாயம் செழிக்கவும், காவேரி நதி வளம் பெருகவும்,

கும்பகோணம் மகாமகம்–2028 எந்தவித அசம்பாவிதமும் இன்றி சிறப்பாக நடைபெறவும், 2028 மகாமகம் விழாவை தேசிய திருவிழாவாக மத்திய அரசு அறிவிக்க நல்லெண்ணம் உருவாகவும் இறைவனை வேண்டி அகில பாரத இந்து மகா சபா தமிழ்நாடு மற்றும் S.A.R வைத்திய சாலை இணைந்து, "காவேரி ஆகர்ஷண வருண மந்திர ஜப மகா யாகம்" கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு அபி முகேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலக நலன் வேண்டியும், 2028 மகாமக பெருவிழா வெற்றிக்காகவும் இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்தார். மேலும் ஸ்ரீ ஸ்ரீ சங்கர தீர்த்த சுவாமிகள், ஸ்ரீ சங்கர நாராயண பீடம் கலந்து கொண்டு, வேத மந்திரங்களுடன் யாகத்தை நடத்தி அருளாசி வழங்கினார்.

பாரம்பரிய நம்பிக்கையின்படி, அருள்மிகு அபிமுகேஸ்வரர் ஆலயம் மேற்கு நோக்கிய சிவாலயமாகும். மேற்கு நோக்கிய சிவாலயத்தில் இறைவனை ஒரு முறை தரிசித்து வழிபடுவது ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவாலயங்களில் வழிபட்ட பலனுக்கு இணையானதாகும். அதேபோல், இத்தலத்தில் நடைபெறும் யாகம் மற்றும் வேள்விகளில் பங்கேற்பதும் ஆயிரம் திருத்தலங்களில் யாகம் செய்ததற்கு ஒப்பான புண்ணிய பலனை அளிக்கும். அந்த மகத்துவம் வாய்ந்த தலத்தில் இந்த மகா யாகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த யாகத்தில் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், சிவனடியார்கள், விவசாயிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
