சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்திருந்தார். அதாவது வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி மற்றும் திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் இடையே மிகக் கடுமையான இழுபறி நீடித்து வந்தது. 

இதனையடுத்து இறுதிச் சுற்று முடிவில் சீனிவாச சேதுபதி 83 ஆயிரத்து 375 வாக்குகளைப் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் பெரிய கருப்பன் 83 ஆயிரத்து 374 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பெறப்பட்ட வெற்றிகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இத்தகைய  சூழலில் தான் திருப்பத்தூர் தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை திமுக முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தாக்கல் செய்திருந்தார். 

அதோடு நம்பிக்கை வாக்கெடுப்பில் சீனிவாச சேதுபதி வாக்களிக்கத் தடை விதிக்கக் கோரி மற்றொரு வழக்கையும் அவர் தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து, தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் சீனிவாச சேதுபதி வாக்களிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை விதிக்கக் கோரிய வழக்கைப் பெரிய கருப்பன் வாபஸ் பெற்றார். இதற்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது  சீனிவாச சேதுபதி வெற்றியை எதிர்த்து தற்போது தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளதால் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த தொகுதி மாறி அனுப்பப்பட்ட தபால் வாக்கை மீட்டு, மறு எண்ணிக்கை கோரி தாக்கல் செய்திருந்த வழக்கை பெரியகருப்பன் திரும்பப் பெற்றுள்ளார்.
0
0
0
0
0
0