தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் பிடித்திருக்கோ, பிடிக்கவில்லையோ, குறிப்பிட்ட மதுபான வகைகள் மட்டுமே விற்கப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான நிறுவனங்களின் பிராண்டுகளே அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. இந்த சூழலில் புதிதாக 54 நிறுவனங்களின் மதுபானங்களை விற்பனைக்கு கொண்டுவர டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கர்நாடகா, கேரளா பாணியில் வெளிநாட்டு மதுபானங்கள் அதிக அளவில் இடம் பெறும் என்கிறார்கள்.



தமிழகத்தில் மதுபான விற்பனையை டாஸ்மாக் நிறுவனம் தான் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மற்றும் ஆயிரக்கணக்கான மனமகிழ் மன்றங்களில் டாஸ்மாக்கில் இருந்து தான் மதுபானங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்த வகையில் டாஸ்மாக் கடைகளில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விஸ்கி, பிராந்தி, ரம், ஓட்கா, பீர் உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் குடிமகன்களை பொறுத்தவரை சில குறிப்பிட்ட சில நிறுவனங்களின் மதுபானங்களை மிகவும் விரும்புகிறார்கள். மீதம் உள்ள நிறுவன மதுபான வகைகள் போதுமான வரவேற்பை பெறவில்லை. வேறு வழியில்லாமல் கட்டாயத்தின் பேரில் வாங்கி செல்பவர்களே அதிகம்.



குறிப்பாக தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் தான் விற்காக சரக்குகள் எல்லாம் விற்பனையாகும். மற்ற நேரங்களில் பெரும்பாலும் மக்களுக்கு பிடித்த சரக்குகளே அதிகம் விற்பனையாகும்.

குடிமகன்களின் பெரிய குறை என்றால், புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் விற்பனையாகும் பிரபல நிறுவனங்களின் மதுபான வகைகள் தமிழகத்தில் கிடைப்பதில்லை என்பது தான். அந்த ஏக்கத்தை தீர்க்க டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பிறமாநிலங்களில் அதிகம் விற்பனையாகும் மேலும் 54 நிறுவனங்களின் மதுபான வகைகளை டாஸ்மாக் பல்வேறு கட்டங்களாக அறிமுகம் செய்ய போகிறது. விரைவில் இந்த மதுபானங்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் மனமகிழ் மன்றங்களுக்கு வரப்போகிறது. இந்த தகவலை கேட்டு குடிமகன்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
0
0
0
0
0
0