கும்பகோணம்: தமிழகத்தில் பருவமழை செழித்து பெய்யவும், டெல்டா மாவட்டங்களின் விவசாயம் வளம் பெறவும், நம் முன்னோர்கள் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வந்த வேத–ஆகம மரபு சிறப்பு வழிபாடுகளை தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், அகில பாரத இந்து மகா சபா – தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் இராம நிரஞ்சன் தலைமையில், விவசாயிகள் மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் இணைந்து, நெற்கதிர் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு வழங்கினர்.
டெல்டா மாவட்டத்தின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான கும்பகோணத்தில் செயல்படும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் வாயிலாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் ஆகியோருக்கு இந்த மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவில், 2019-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்பட்ட பாரம்பரிய மழை வேண்டுதல் வழிபாட்டு நடைமுறைகளை மீண்டும் செயல்படுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் வேத–ஆகம மரபுப்படி சிறப்பு வழிபாடுகளை நடத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பாரம்பரிய வழிபாட்டு முறைகளை மீண்டும் உயிர்ப்பிப்பதே இயற்கை வளம், நீர்வளம் மற்றும் விவசாய வளத்தைப் பாதுகாக்கும் பண்பாட்டு முயற்சியாகும். தமிழ்நாடு அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இம்மனுவை கனிவுடன் பரிசீலித்து, தொன்றுதொட்டு பின்பற்றப்பட்ட இந்து சமய மரபுகளை மீண்டும் நடைமுறைப்படுத்தி, உரிய சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபா வலியுறுத்தியுள்ளது.
இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்ட பொதுச்செயலாளர் தட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் வேல்முருகன், அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மனு வழங்கினர்.
"மழை வளம் பெருகட்டும்...
விவசாயம் செழிக்கட்டும்...
வேத–ஆகம மரபுகள் மீண்டும் நடைமுறைக்கு வரட்டும்...!"
