தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் புதுவையில் உள்ள தனது சகோதரரின் வீட்டிற்குள் புகுந்து சகோதரர் மற்றும் மனைவியை கட்டையால் தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமீபத்தில் வெளியாகி இருந்தன. இது தொடர்பாக மரிய வில்சன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு புதுவை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மரிய வில்சன் சகோதரர் பேட்டி
புதுவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் மரிய வில்சன் நேரில் ஆஜராகுமாறு நீதிபதிகள் கூறியிருந்தும், பட்ஜெட் தயாரிப்பது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாக கூறி நேற்று அவர் ஆஜர் ஆகவில்லை. இதையடுத்து வழக்கு வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் "வழக்கை வாபஸ் பெற வைப்பதற்காக அமைச்சர் மரிய வில்சன் சார்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ள சூழலிலும் பின் வாங்க மாட்டோம் என மரிய கிளோத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
நான் தான் தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சனின் சகோதரர் மரிய கிளோத். சொந்த சகோதரர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு 8 ஆம் தேதி, மரிய வில்சன் எங்க வீட்டுக்குள் நுழைந்து கொலைவெறி தாக்குதல் நடத்தினார். அத பத்தி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இன்று வழக்கு விசாரணை நடந்தது. ஆனால் மரிய வில்சன் நேரில் ஆஜர் ஆகவில்லை. வரும் 10 ஆம் தேதி கண்டிப்பாக ஆஜர் ஆக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
நீதித்துறையை மட்டுமே நம்பி இருக்கிறோம்
2022 ஆம் ஆண்டில் இருந்தே அந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் இருந்தே எங்கள் மீதான வழக்கை திரும்ப பெற சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருக்கின்றனர். ஏன் மீதும் என் மனைவி மீதும் நிறைய பொய் வழக்குகள் போடுகிறார்கள். ஆனால் நீதித்துறையை மட்டுமே நம்பி இருக்கிறோம். இவ்வளவு கஷ்டங்களையும் தாண்டி இந்த வழக்குகளை எதிர்கொள்கிறோம் என்றால் நீதித்துறை மீதுள்ள நம்பிக்கையில் மட்டும்தான்.
எங்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலுக்கு பிறகு நாங்கள் எங்க இருந்தோம் என்று யாருக்குமே தெரியாது. குடும்பத்தில் இருக்கிற யாருக்கும் தெரியாது. தமிழகத்தில் தான் போய் இருந்தோம். அயல்நாட்டுக்கும் போனோம். அங்கே கொஞ்ச நாள் இருந்தோம். எல்லாத்தையும் சட்டப்பூர்வமாக சந்தித்து வருகிறோம். முதல் நோக்கம் என்னவென்றால் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவங்களுடைய சகாக்கள் நிறைய பேர் இருக்காங்க.. அவங்க தான் நிறைய பொய் வழக்குகளை எங்கள் மீது போட்டு இருக்கிறார்கள்.
