சென்னை: கன்னியாகுமரியில், அணுக்கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கான ஒதுக்கீட்டு ஆணையை ஓராண்டிற்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த கட்சி MLA-க்களை வலைவீசி, குதிரை பேரம் பேசி இழுப்பதற்கும், "கல்லாப்பெட்டி கூட்டணி" என்று தேர்தலுக்கு முன் சொன்ன கட்சிகளை எல்லாம், தங்கள் "Sofa கூட்டணி"க்குள் நுழைப்பதற்கும் இடையே இப்படி ஒரு அரசாணை வெளியிட்டால் அதனை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தீர்களா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே 1144 ஹெக்டேர் நிலப்பரப்பில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஆதரவு அளிக்கும் வகையில், இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டு ஆணையை ஓராண்டிற்கு நீட்டித்து தவெக பொய்க்கால் குதிரை அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இதே திட்டத்தை, கடந்த 03.11.2024 அன்று நடந்த அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அந்த தீர்மானத்தில் இத்திட்டத்தை தென் தமிழகத்தை பாழ்படுத்தும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ள இன்றைய ஆளுங்கட்சி, இதனை அபாயம் விளைவிக்கும் நாசகார நச்சுத் திட்டம் என்று கூறி இதனை கைவிட வலியுறுத்தி உள்ளது.
அணுக்கனிமச் சுரங்கம்
தற்போது அந்த நிலைப்பாட்டில் என்ன மாற்றம் வந்துவிட்டது? ஆட்சிக்கு வருவதற்கு முன் நாசகார நச்சுத் திட்டமாக இருந்தது, இப்போது நன்மை பயக்கும் நலத்திட்டம் ஆகிவிட்டதா முதலமைச்சர் விஜய்! எதற்கு இந்த இரட்டை வேடம்?
