அம்பாசமுத்திரம் தொகுதியின் இடைத் தேர்தலில் பொது வேட்பாளராக சீமான் களம் இறங்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகின.

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக களம் காண்கிறாரா சீமான்? – நாதகவில் இருந்து வந்த அப்டேட் என்ன?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம் உட்பட ஆறு தொகுதிகள் காலியாக உள்ளன. இதற்கான இடைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பாசமுத்திரம் தொகுதியின் இடைத் தேர்தலில் பொது வேட்பாளராக களம் இறங்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், இதற்கு நாதக தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதேபோல், தவெக தலைவர் ச. ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் வென்றார். மேலும், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் பிரபுவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை தக்கவைத்துக்கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுகவின் மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் மற்றும் விராலிமலை ஆகிய தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதன் காரணமாக தற்போது தமிழ்நாட்டில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றுக்கு விரைவில் இடைத் தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், திமுக திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் தங்கள் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சுப நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, விரைவில் ஸ்டாலின் சட்டமன்றத்திற்குள் வருவார் எனத் தெரிவித்தது உள்ளிட்டவை பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று அண்ணா அறிவாலயம் வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் செய்தியாளர்கள், “திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் நீங்கள் போட்டியா?” என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “இன்னும் முடிவெடுக்கவில்லை. அதுகுறித்து முடிவெடுத்ததும் சொல்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்தச் சூழலில் அதிமுகவில் இருந்து அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ.வாக தேர்வான இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து அம்பாசமுத்திரம் தொகுதி உட்பட காலியாக இருக்கும் ஆறு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி இடைத் தேர்தலில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானை பொது வேட்பாளராக நிறுத்தி மற்ற எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல் இருக்க முடிவு செய்திருப்பதாக பரவலாக தகவல்கள் பரவின. இந்நிலையில், இதற்கு நாதக தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாதக தொடங்கப்பட்டு தேர்தலை தனிச்சையாகவே சந்தித்துவருகிறது. அந்த வகையிலேயே இடைத் தேர்தலையும் சந்திக்கும் என நாதக தரப்பில் இருந்து தகவல் சொல்லப்பட்டுள்ளது.
1
0
0
0
0
0