முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் சொன்ன குட்டி கதையும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலும் பெரும் பேசுபொருளான நிலையில், இது குறித்து சி.பி.எம். எம்.பி. சு. வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

தனிநபர் விமர்சனங்கள்… ஆளுங்கட்சிக்கு கூடுதல் பொறுப்பு சி.பி.எம். எம்.பி. சு. வெங்கடேசன்
முதலமைச்சர் ச. ஜோசப் விஜயின் குட்டி கதையும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் சொன்ன கருத்தும் பெரும் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில் சிபிஎம் எம்.பி. சு. வெங்கடேசன் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், நேற்று (23ஆம் தேதி) பதிலுரை வழங்கினார்.

இதில் பேசிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், குட்டி கதை ஒன்றை சொன்னார். அதில், வயதான தாத்தா ஒருவர் யாரையோ தேடிக்கொண்டிருந்தார். அப்போது உடன் இருந்த சிறுவன் யாரை தேடுகிறீர்கள் என கேட்டதாகவும், அதற்கு அந்த தாத்தா, உங்க அப்பா இங்கேதான் இருந்தார் என சொன்னார்கள் அவரைத் தான் தேடுகிறேன் எனத் தெரிவித்ததாக ஒரு கதை சொன்னார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இதற்கு பதில் கொடுக்கும் விதமாக, “செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்” எனத் தெரிவித்தார்.

இதேபோல் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய முன்னாள் அமைச்சர் சிவசங்கர், “கணவனை காணவில்லை என மனைவி செங்கல்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அப்பாவை காணாமல் மகனும், மகளும் தவித்துப்போய் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயின் குட்டி கதையும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் சொன்ன கருத்தும் பெரும் பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில் சிபிஎம் எம்.பி. சு. வெங்கடேசன் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டின் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை. அதை நிறைவேற்றிய அரசுக்கு எனது பாராட்டுகள். இந்த நேரலை, ஜனநாயகத்தை இன்னும் வலிமைப்படுத்தும்; சட்டமன்ற உறுப்பினர்களின் பொறுப்புணர்ச்சியையும் அதிகரிக்கும்.

அதே நேரத்தில், விவாதங்களின் தரம் மிகவும் முக்கியமானது. தனிநபர் விமர்சனங்கள் என்று தொடங்கிவிட்டால் அதற்கு எல்லையே இல்லை. இத்தகைய விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது; கூடுதலாக ஆளுங்கட்சிக்கு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
0
0
0
0
0
0