சென்னை: விஜயபாஸ்கருடன் புதியதாக இன்னும் சிலரைச் சேர்த்து ஒரு 10 முதல் 12 பேர், அதாவது குறைந்தபட்சம் 12 உறுப்பினர்களாவது வேண்டும் என்று விஜய் எதிர்பார்க்கிறாராம். இந்த 12 பேரும் இடைத்தேர்தலைச் சந்தித்து, அதில் 6 அல்லது 7 இடங்களிலாவது வெற்றி பெறுவார்கள். இதில் சரி, தவறு என்றெல்லாம் நாம் ஒன்றும் பேசிவிட முடியாது. இதில் குறை கூறுவதற்குக் திமுகவிற்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது என்று பத்திரிகையாளர் மணி கருத்து கூறியிருக்கிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்த சி. விஜயபாஸ்கர், சபாநாயகரை நேரில் சந்தித்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை கைப்பட எழுதி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அரசியல் அடுத்தகட்ட நகர்வு: அவர் அதிமுகவிலிருந்து முழுமையாக விலகியதைத் தொடர்ந்து, திமுகவில் இணையப் போகிறாரா அல்லது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறாரா என்ற பலத்த விவாதம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

விஜயபாஸ்கரின் ராஜினாமா
விஜயபாஸ்கரின் இந்த ராஜினாமாவைத் தொடர்ந்து, அவரது ஆதரவோடு இன்னும் சில எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுத்து சட்டமன்றத்தில் தனது ஆட்சிக்கு ஒரு பலமான பாதுகாப்பு வளையத்தை உருவாக்க விஜய் தரப்பு திட்டமிட்டுள்ளதாக பத்திரிகையாளர் மணி பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார்.

பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி தந்துள்ள மணி, "விஜயபாஸ்கர் ராஜினாமா என்ற நகர்வை நாம் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. இன்று இந்த மதிமுகவின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யச் சம்மதித்துவிட்டார்கள் என்றால், திமுகவில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தன் பக்கம் ஈர்க்கும் காரியத்தைத் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிவிட்டது என்றுதான் பொருள்.

சட்டமன்ற உறுப்பினர்
இந்த ராஜினாமாவை சட்டப்படி யாராலும் தடுக்க முடியாது. ராஜினாமா என்பது ஒரு சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினரின் அடிப்படை உரிமை ஆகும். ஒரு முறை வெற்றி பெற்றுவிட்டார் என்பதற்காக அவர்கள் அந்த கட்சியிலேயேதான் நீடிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

கட்சி மாறுவதுதான் தவறே தவிர, ராஜினாமாவை யாரும் குறை கூற முடியாது. அது அந்தந்த கட்சிகளின் தலைமை செய்யக்கூடிய தவறுகளால் இவர்களை அந்தப் பக்கம் நகர்த்துகிறார்கள்.

குறைந்தபட்சம் 112 அல்லது 113 உறுப்பினர்கள்
குறைந்தபட்சம் 112 அல்லது 113 உறுப்பினர்கள் இருந்தால் இன்னும் பாதுகாப்பாக இருக்கலாம். காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கூட்டணி கட்சிகள் விஜய்யிடம் இருந்தாலும், 107 என்பது மிகவும் ஆபத்தான எண்ணிக்கை என்பதால் ஆட்களைத் தங்கள் பக்கம் ஈர்க்கிறார்கள். இப்போது 6 பேர் இணைந்துவிட்டார்கள். விஜயபாஸ்கருடன் புதியதாக இன்னும் சிலரைச் சேர்த்து ஒரு 10 முதல் 12 பேர், அதாவது குறைந்தபட்சம் 12 உறுப்பினர்களாவது வேண்டும் என்று விஜய் எதிர்பார்க்கிறாராம்.

இந்த 12 பேரும் இடைத்தேர்தலைச் சந்தித்து, அதில் 6 அல்லது 7 இடங்களிலாவது வெற்றி பெறுவார்கள். இதில் சரி, தவறு என்றெல்லாம் நாம் ஒன்றும் பேசிவிட முடியாது. இதில் குறை கூறுவதற்குக் திமுகவிற்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது.

ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன்
கடந்த காலத்தில் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் விவகாரத்தில் திமுக என்ன செய்தது? உங்களுடைய அரசாங்கம் பாதுகாப்பாக இருந்தபோது, நீங்கள் ஆட்களைப் பிடித்து அழைக்கவில்லையா? மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தானே அந்த 3 பேரும் தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு உங்களிடம் வந்தார்கள்? அதேபோலத்தானே நீங்களும் அவர்களுக்குப் பதவிகளைக் கொடுத்தீர்கள்?

அப்படியிருக்கும்போது , விஜய் செய்வதை விமர்சிப்பதற்கு உங்களுக்கு என்ன தார்மீகத் தகுதியும் அருகதையும் இருக்கிறது? ஒரு கட்சியின் மொத்த உறுப்பினர்களில் 3ல் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கட்சி மாறினால்தான் அது தவறு. ஆனால், ஒரு சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியைப் பற்று அறத் துறக்கிறார் என்றால் அது அவருடைய தனிப்பட்ட உரிமை ஆகும்.

உங்களுக்குச் சுயமரியாதை இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் செல்லுங்கள் என்றுதானே கூறுகிறோம்? அவர்களும் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத்தான் செல்கிறார்கள், அதற்கு நீங்கள் ஏன் இப்போது புலம்புகிறீர்கள்? என்றெல்லாம் காட்டமாக கேள்வி எழுப்புகிறார்.
1
0
1
0
0
0