நாகையிலிருந்து இயக்கப்பட்ட வ.உ சிதம்பரனார் பயணிகள் கப்பல் தீ விபத்து காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் தற்பொழுது மீண்டும் புதிதாக கப்பல் சேவை துவங்கப்பட்டுள்ளது, 

ஏற்கனவே நாகை துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இருந்த நிலையில் அந்த சேவை 1982 ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. மத்திய அரசு நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு வழங்கிய 3 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவினப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டது. 



மேலும் பயணிகள் முணையம் அமைக்கப்பட்டு குடியுறிமை பெறுவது, மருத்துவ பரிசோதனை செய்வது, பயணிகள் உடமைகளை ஆய்வு செய்வது என அனைத்திற்கும் தனித் தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் பணியாற்றுவதற்காக பாஸ்போர்ட் சோதனை, பயணிகள் உடமைகள் ஆய்வு செய்வது என பல்வேறு பணிகளில் பணியாற்றும் அதிகாரிகள் டெல்லி சென்று பயிற்சி பெற்று வந்தனர். 

இதனைத் தொடர்ந்து 2007 ல் தயாரிக்கப்பட்ட செரியாபாணி என்ற கப்பல் 25 கோடி ரூபாயில் கேரளாவில் புணரமைக்கப்பட்டு கடந்த 7 ம் தேதி கொச்சின் துறைமுகத்தில் இருந்து நாகை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. கடந்த 8 ம் தேதி மாலுமி மற்றும் 14 பயணிகளுடன் சோதனை ஓட்டம் வெற்றிக்கரமாக நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறை துறைமுகத்திற்கு செரியாபானி என்ற பயணிகள் கப்பல் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக இயக்கப்படுகிறது.

இதன் துவக்க விழா நாகை துறைமுகத்தில் கோலகலமாக நடைப்பெற்றது. பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து கானொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். தொடர்ந்து கப்பலை மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மற்றும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைதுறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து கப்பலை அனுப்பி வைத்தனர்.

இந்த கப்பல் 150 பயணிகளுடன் பயணிக்கும் வசதியினை கொண்டுள்ளது. முற்றிலும் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய சொகுசு இருக்கைகள் கப்பலில் உள்ளது .36 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய திறன் கொண்ட இந்த கப்பல் 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன் துறையினை 3 மணிநேரத்தில் சென்று சேரும் என கூறப்படுகிறது. 

கப்பலில் பயணிக்க கூடிய பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர் பானங்கள் போன்றவைகளை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொழுது போக்கிற்காக 6 தொலைக்காட்சி பெட்டிகள் தமிழ், ஆங்கிலம் மற்ற மொழியினருக்கு தேவையான வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோக ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிக்கு தனித்தனியாக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

கப்பலில் செல்வதற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன் 7670 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று துவக்க விழாவை முன்னிட்டு 75 சதவீதம் சலுகை அறிவிக்கப்பட்டு 18 சதவீத ஜீ.எஸ்.டி வரியுடன் 2803 ரூபாய் சலுகை விலை அறிவிக்கப்பட்டதால் தற்போது 50 பயணிகள் முன்பதிவு செய்து கப்பலில் தற்போது பயணம் செய்கின்றனர். 

துறைமுக நகரம் என்று அழைக்க கூடிய நாகை துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்திற்காக பண்ணாட்டு முணையம் அமைக்கப்பட்டுள்ளதால் பண்ணாட்டு பயணிகளை கையாளும் வகையில் சர்வதேச அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த கப்பல் போக்குவரத்து துவக்க விழாவில் சட்டத்துறை அமைச்சர ரகுபதி, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் , சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, ஆளுர் ஷாநவாஸ், உள்பட துறைமுக அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர். KPV ஷேக் முகமது ராவுத்தர் என்ற தனியார் நிறுவனம் கப்பலை இயக்குவதற்கான உரிமத்தை பெற்றுள்ளது. இந்த கப்பல் போக்குவரத்தால் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வர்த்தகம் பெருகும் என்பதால் வணிகர்களும் பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2
0
0
0
0
0