மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரியின் வலது கரையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வழிகாட்டும் வள்ளல் எனப்படும் வதானியேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. நவகிரகங்களில் குரு பரிகார ஆலயமான இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடந்த பத்தாம் தேதி நடைபெற்றதை தொடர்ந்து இதன் மண்டல அபிஷேக மூர்த்தி விழா நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக முதல் கால யாகசாலை பூஜை மற்றும் இரண்டாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. 108 சங்கு மற்றும் புனித நீர் அடங்கிய 108 கலசங்களைக் கொண்டு யாகம் செய்யப்பட்டு சுவாமி அம்பாள் மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதியில் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நல்ல மழை பெய்து காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வர வேண்டி ஆலயத்தில் உள்ளே அமைந்துள்ள கங்கை அம்மன் மற்றும் காவிரி அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை தீபாராதனை செய்யப்பட்டது. தருமபுரம் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.