மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக 30 ஆண்டு காலம் பணியாற்றியவர் எஸ்.என்.மாரியப்பன். சத்துணவு அமைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் என்பது கிடையாது.மதிப்பூதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.இவருக்கு ஓய்வு பெறும்போது சுமார் 26,000 ரூபாய் மதிப்பூதியமாக வழங்கப்படுகிறது. இவர் பள்ளியில் பணியாற்றிய போது பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்னரே வந்திருந்து மாணவர்களை காலை நேர வழிபாட்டிற்கு நிற்க வைப்பது பிறகு ஒழுங்குப்படுத்தி வகுப்புகளுக்கு அனுப்புவது என்று இவரது துறை இல்லாத பணிகளையும் சிறப்புடன் செய்துள்ளார்.

இவர் ஏழை மாணவர்களுக்கு சிறு சிறு கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கும்  மாணவர்களுக்கு உடல்நிலை சரி இல்லாத சூழல் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பிப்பதற்கும் சிகிச்சை பெறவும் உதவியாக இருந்துள்ளார். கல்வித்திருநாளாக கொண்டாடப்படும் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் அன்று பள்ளி முழுவதும் மாணவர்களுக்கு நான்கு விதமான சாதங்களை சமைத்து வருடம் தவறாமல் உணவளித்து வந்துள்ளார். தான் ஓய்வு பெற்ற பிறகும் பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னத்தில் கலையரங்கம் மற்றும் காலை பிரார்த்தனை செய்வதற்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் மேற்கூரையை கட்டித்தந்து தான் ஓய்வு பெறும் நாளில் ஒப்படைத்துள்ளார். 

இவருக்கு ஓய்வூதிய பணப்பலனாக ஒரு லட்ச ரூபாய் மட்டுமே அரசு மூலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னால் வழங்கப்பட்ட மேற்கூறையை மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்களிடம் ஒப்படைத்தார். 
கொடை வழங்குவதற்கு பணம் முக்கியமில்லை மனம் தான் முக்கியம் என்ற மிகப்பெரிய கொள்கையுடன் மாணவர் நலனுக்காகவே வாழ்ந்து ஓய்வு பெற்ற மாரியப்பனை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைத்தனர்.
0
0
0
0
0
0