பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், பனை நடுவதை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நுங்கு, பதநீர், பனைமட்டை, நார், ஓலை, வெல்லம், கருப்பட்டி பனங்கற்கண்டு என பனையின் பயன்கள் மிக அதிகம் தமிழ்நாட்டின் மாநில மரமாகவும் பனைமரமே விளங்குகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள, 117 கி.மீ அளவிற்கு கடற்கரை பகுதிகளில் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் சுமார் 75 கி.மீ. அளவிற்கு "வருமுன் காத்திடுதல் நன்று" என்பதற்கேற்ப பேரிடர் மேலாண்மை மற்றும் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றிற்காக உயிரி தடுப்பு அரண்கள் அமைத்திடும் பொருட்டு பனை விதைகள் நடும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 வட்டங்களிலுள்ள 26 கடலோர கிராமங்களில் பனை தடுப்பு அரண்கள் அமைக்கும் பொருட்டு கடலோர பகுதிகளில் உள்ள சீம கருவேல மரங்களை அகற்றி கடலோரப் பகுதிகளில் பாதுகாக்க மாவட்டம் முழுவதும் 6 லட்சத்து 60 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளாதாகவும் அதன் ஒரு பகுதியாக நாகூர் சில்லடி கடற்கரையில் கடல் அரிப்பை தடுக்கவும் கடற்கரையில் பல்லுயிரியத்தை காக்கவும் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் பனங்காடு அமைக்கும் பணியை நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
நாகூர் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பண விதைகளை நடவு செய்தனர் தொடர்ந்து மாணவர்களுடன் பனை விதைப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு பனை மரத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பனைவெல்லம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர், வனத்துறை அலுவலர்கள், வார்டு உறுப்பினர், அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ மாணவிகள் தொண்டு நிறுவனர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.