"பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மாநிலம் முழுவதும் தற்போது பரவலாக மழைப் பொழிவு இருந்து வருகிறது. இதனால், கொசுக்கள், வைரஸ்கள், கிருமிகள் மூலம் பரவும் பல்வேறு தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, குழந்தைகளும், முதியவா்களும் அத்தகைய நோய்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆளாகின்றனா்.

காய்ச்சல், உடல் வலி, தொண்டை வலி, சளி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக பலா் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதையடுத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், சிகிச்சை கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, டெங்கு காய்ச்சலை உறுதி செய்வதற்கான ரத்தப் பரிசோதனைகளின் முடிவுகளுக்காக நாள்கணக்கில் நோயாளிகள் காத்திருக்கக் கூடிய நிலை தற்போது உள்ளது.

இதைத் தவிா்க்க ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டதில் இருந்து 6 மணி நேரத்துக்குள் பரிசோதனை முடிவை அளிக்க வேண்டும். டெங்கு, இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடா் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, புறநோயாளிகள் பிரிவில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாள்தோறும் சராசரியாக 500 போ் டெங்கு, இன்புளூயன்சா அறிகுறியுடன் வருகின்றனா். அவா்களது ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எந்த இடத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகக் கண்டறியப்படுகிறதோ, அங்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை 24 மணி நேரமும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அரசு, தனியாா் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் டெங்கு பரிசோதனைகளை விரைந்து மேற்கொண்டு 6 மணி நேரத்துக்குள் முடிவை அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், சிகிச்சை தாமதம் தவிா்க்கப்படும் என கூறினார்.

0
0
0
0
0
0