உச்ச நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்தும் தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்காமல் கர்நாடகா அரசு அலட்சியம் காட்டி வருகிறது. குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் செயல்படாமல் மத்திய அரசு மௌனம் காத்து வருவதால் தமிழக விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்தது வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பாக நாகை அவுரி திடலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
அதிமுக, விசிக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் நடைபெற்ற போராட்டத்தில் வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன், தமிழ்தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், ஈசன் முருகசாமி உள்ளிட்ட தமிழகம் முழுவதுமுள்ள விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் காவிரி நீரை கர்நாடகா அரசு விரைந்து திறந்துவிட வேண்டும், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பப்பட்டது.
கர்நாடகா மற்றும் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓஎஸ்.மணியன் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்று எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓஎஸ். மணியன் கூறுகையில்; ஒன்றிய அரசு தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மலுப்பியும், தடுமாறியபடியும் பதிலளித்தார். அப்போது ஒன்றிய அரசு என்று முன்னாள் அமைச்சர் ஓஎஸ்.மணியன் உச்சரித்தபோது, மத்திய அரசு என்று கூறுங்கள் என்று அதிமுக அமைப்பு செயலாளர் ஆசைமணி கூறியவுடன் சுதாரித்த அவர் மத்திய அரசு என கூறி பேச்சை தொடர்ந்தார். பின்னர், 80 சதவீத குறுவை நெற்பயிர்கள் அழிந்துள்ளதால் தமிழக அரசு குறுவைக்கும் காப்பீட்டு திட்டம் அறிவிக்க வேண்டும், உரிய இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கவேண்டும். உச்ச நீதிமன்ற ஆணையை அவமதித்து தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசிற்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர வேண்டும். விவசாயிகள் உயிரிழப்புகளை தடுக்க கர்நாடகா அரசு விரைந்து தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்காக போராடிய பொதுவுடமை கட்சிகள் எங்கே சென்றது? மௌனம் காக்கும் பொதுவுடமை காட்சிகள் தமிழக அரசுக்கு விவசாயிகளின் மோசமான நிலையை பொதுவுடமை காட்சிகள் எடுத்து சொல்லவேண்டும் என்று கூறினார்.