கும்பகோணம் அடுத்த கோவிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாக துறை சார்பில் தொழில் முனைவோருக்கான அணுகுமுறை, நன்னடத்தை, மற்றும் படைப்பாற்றல் குறித்த இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஏ.சி.ஏ.எஸ். கருத்தரங்கு கூடத்தில் 20.09.2023 மற்றும் 21.09 2023 ஆகிய இரு நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்ற இப்பயிற்சி பட்டறையில் திருவனந்தபுரம் சோமர்வெல் நினைவு மருத்துவ மேலாண்மை கல்லூரியின் முதல்வரும் ஏ.என்.டி கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைவருமான பேரா.டாக்டர்.தி.ஜெயராஜசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சியினை வழங்கினார்.
அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சீ.பொ .மாணிக்கவாசுகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வணிக மேலாண்மை துறை இயக்குனர் முனைவர்.சுரேஷ் முன்னிலை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் முனைவர் செல்வம் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினரான பேரா.டாக்டர்.தி.ஜெயராஜசேகர் சிறப்புரை ஆற்றுகையில், 2022-23 பொருளாதார ஆய்வறிக்கையின்படி (Economic Survey Report 2022-23) 2016ஆம் ஆண்டில் 452 ஆக இருந்த புத்தொழில்களின் (ஸ்டார்ட்அப்) எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 84,012 ஆக அதிகரித்துள்ளது என்றும், இவற்றில் சுமார் 1,000 மேற்பட்டவை விவசாய புத்தொழில்கள் என்றும் எடுத்துரைத்தார்.
இரண்டாவது நாளில் தொழில் முனைவோர் படைப்புத்திறனுக்கான வரைபடம் தயாரித்தல் (Creative Curve) மற்றும் நூதன உள்ளாக்கம் (Innovation Engine) உருவாக்குதல் குறித்து பயிற்சி வழங்கினார்.இவற்றை கொண்டு எங்கனம் தொழில் முனைவோருக்கான அணுகுமுறையினை தீர்மானிக்கவேண்டும் என்று எடுத்துரைத்தார்.
உதவி பேராசிரியர் ஜோதி பிரியா அவர்கள் நன்றி கூறினார். 500க்கும் மேற்பட்ட மாணவமாணவிகள் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்