வரலாற்று மாநகர் பழையாறையை முடிகொண்ட சோழபுரம், நந்திபுரம், இராசராசபுரம், ஆகவகுலகாலபுரம் என்ற சிறப்பு பெயர் கொண்டது. வானுயர்ந்த மாளிகைகளையும் கோட்டை கொத்தளங்களையும் கொண்ட இந்நகர் காலப்பெருவெள்ளத்தில் தன்வனப்பினை இழந்து இன்று சிறு சிறு கிராமங்களாக சிதருண்டு உள்ளது. 

வரலாற்று மாநகர் பழையாறை, இக்காலத்தில் உடையாளூர், கொட்டியப்படுகை, தேனாம்படுகை, கீழப்பழையாறை, மேலப்பழையாறை, முழையூர், பம்பப்படையூர், ஆரியப்படையூர், அரிச்சந்திரபுரம், தாராசுரம், பட்டீஸ்வரம், சோழன்மாளிகை,  திருமேற்றளிகை, கோபிநாதபெருமாள் கோயில்,  மணப்படையூர், புதுப்படையூர், சுந்தரபெருமாள் கோயில் என்னும் கிராமங்களாக உள்ளன,
பழையாறை மாநகர் சோழ மாமன்னர்களும், பேரரசியர்களும் தங்களுடைய பிறப்பு முதல் துள்ளி திரியும் இளமைப் பருவத்தையும் அதன் பிறகு கோலூன்றும் முதுமை காலத்தையும் கழிக்கும் இடமாக இந்நகர் அமைந்துள்ளது. இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கத்தைப் பள்ளிப்படுத்துதல் என்பர், இதன் மேல் கட்டப்படும் கோயில்கள் பள்ளிபடைக்கோயில்கள் என்பர். அவ்வகையில் பட்டீச்சுரத்தில் அமைந்த பள்ளிப்படை கோயில் பஞ்சவன் மாதேவீச்சுரம் ஆகும். 



முதலாம் இராசராச சோழனுக்கும் வானவன்மாதேவிக்கும் பிறந்தவன் முதலாம் இராசேந்திர சோழன் இப்பேரரசனை தன்ஈடுஇணையற்ற தாய் பாசத்தால் மாவீரனாக்கிய பெருமை பஞ்சவன்மாதேவிக்கு உண்டு. பஞ்சவன்மாதேவி பழுவேட்டரையர் என்ற அரச குடும்பத்தில் பிறந்து தேவரடியாராக உருவெடுத்து பரதம் முதலிய நாட்டியங்களையும் இசையிலும் பல்வேறு வாத்தியங்களை இசைப்பதில் சகலகலா வல்லியாகவும் நடமாடும் பல்கலைகழகமாகவும் போர்திறன் மிக்கவளாகவும் ஒற்றர் படைமூலம் சோழசாம்ராஜித்தின் இரகசியங்களை அறிந்து கொள்வதில் மதியுகமந்திரியாகவும் முதலாம் இராசராசனின் வீரத்திலும் சிவபக்தியிலும் இரண்டறக்கலந்து வழிநடத்தியவர் பஞ்வன்மாதேவி. 



இம்மாதரசி தஞ்சை பெரியகோயில் எழுந்தபோது சிவமணங்கமழ 63-அடிவர்தம் வாழ்க்கை வரலாற்றையும் முதலாம் இராசராசனின் வெற்றியையும்  நாட்டிய நாடகமாக சிற்பிகள், பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளம் மகிழ சுமார் 400-நாட்டிய மகளிர்களான தேவர் அடியார்களை வழிநடத்தியவர். தஞ்சை பெரிய கோயிலுக்கு உலோக சிலைகளையும், நகைகளையும், அணிமணிகளை வாரிவழங்கியது அல்லாமல் தன்னைச்சார்ந்தோரையும் பெரும் பொருள் உதவியையும் உழைப்பையும் நல்கசெய்த பெருமை இப்பிராட்டியாருக்கு உண்டு இவரும் மாமன்னர் முதலாம் இராசராசசோழனும் சதயநட்சத்திரத்தில் பிறந்தவர்வர்கள்  ஆதலால் திருபுகலூர் கோயிலுக்கு ஏறாலமான தானங்களை வழங்கி சதயநட்சத்திர விழாவை பெரும் விழாவாக கொண்டாடச்செய்தனர், திருவிடைமருதூர் கோயிலுக்கு இவ்வம்மையார் தரிசிக்க வரும்போது பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்றுயுள்ளனர். இன்றைய திருநாகேஸ்வரம், திருநல்லூர் ஆகியவை அக்காலத்தில் பஞ்சவன்மாதேவி சதுர்வேதிமங்களம் என்று அழைக்கப்பட்டுள்ளது.



பஞ்சவன்மாதேவி வேளம், பஞ்சவன்மாதேவி வாய்க்கால் முதலானவை இவர் பெருமையை பறைசாற்றும்.
தன் தந்தையின் மறைவிற்கு பிறகு எல்லையற்ற தாய்பாசத்தால் தன்னை வழிநடத்திய சிற்றன்னை பஞ்வன்மாதேவி மறைவை தாங்கமுடியா பெரும் துயரத்தில் ஆழ்ந்த இராசேந்திரசோழன் இப்பெருமாட்டியைப் பள்ளிப்படுத்திய இடத்தில் காலத்தால் அழியாத அழகான கற்றளி ஒன்றை அமைத்து அக்கலைக்கோயிலுக்கு பஞ்சவன்மாதேவிச்சுரம் என்ற  பெயர் சூட்டினான்.

முதலாம் இராசேந்திரசோழன் இன்றைய குடவாசலுக்கு அன்னையில் அமைந்த சிற்றாடி கிராமத்தின் நெல்வருவாய் சுமார் 5500-கலம் நெல்லை இத்திருகோயிலுக்கு வருவாயாக அளித்துள்ளான். இன்றைய மதிப்பு சுமார் ரூ.30 இலட்சம் ஆகும்.
இக்கோயில் கல்வேட்டில் சத்திரியசிகாமணி வளநாட்டு, திருநறையூர் நாட்டு, பழையாறையான முடிகொண்ட சோழபுரத்து பள்ளிப்படையான பஞ்சவன்மாதேவிசுரத்து மகாதேவர் என்று இறைவன் திருபெயரும், கல்லில் வெட்டசொன்னவர் உய்யக்கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டுக் கேராளாந்தக சதுப்பேதிமங்கலத்து மாராயன் அருள்மொழியான உத்தமசோழபிரம்மராயன், கண்காணிக்கும் பொறுப்பாளர் சேற்றூர்கூற்றத்து மருதத்தூர் உடையான் வெண்காடன் கோவந்தை என்பாரும் மடாதிபதி லகுளீசுவர பண்டிதர் என்பார் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. 



இக்கோயில் இறைவனுக்கு மூன்று கால பூசைக்கு திருஅமுது, நெய்யமுது, உப்பு மிளகுடன் கூடிய கறியமுது, தயிர் அமுது, அடைக்காய் அமுது(வெற்றிலை பாக்கு) ஆகியவையும் பிற தெய்வங்களான கணபதி, சந்திரசேகரர், உமாசகிதர் ஆகிய தெய்வங்களுக்கு பூசை செய்வதற்காக நெல் ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று நூந்தாவிளக்குகளும் சிறுகாலை பொழுதில் எட்டும், உச்சிபொழுதில் எட்டும், இராப்பொழுதில் பதினாறும் என சந்திவிளக்குகள் முப்பத்தி இரண்டு விளக்குகள் எரிக்க நெய் வழங்க தொகை நெல்லாக கொடுக்கப்பட்ட செய்தி காணப்படுகிறது, மேலும் திருமஞ்சனம், திருமெய்பூச்சு இவற்றுக்கும் சந்தனம், குங்கிலியம் வழங்கப்பட்டுள்ளது.  

இராசேந்திரசோழதேவரின் திருநட்சத்திரமான  திருவாதிரை திருநாள் அன்றும் அவரது தேவியின் திருநட்சத்திரமான ரேவதி திருநட்சத்திரம் தோறும் வரும் நாளில் பெரும் படையலிட்டு கொண்டாடியுள்ளனர். இத்திருகோயிலில் ஐந்து ஒதுவார் மடாதிபதி லகுளீசபண்டிதர், திருவாதிரை திருவிழா எடுக்கும் பிடாரர் சிவ பிராமணர் கணக்கு எழுத்துவார் பண்டாரத்தை காக்கும் வெண்கடார் திருமெய்க் காவல் செய்த பொன்னம்பலம், மேலும் கொட்டும் அருவர், திருஅலகு, திருமெழுகு இட்டவருக்கும் கோயிலைக் காத்தவருக்கும் ஊதியங்கள் வழங்கப்பட்டுள்ளன. 



இத்தகைய வரலாற்று  சிறப்புமிக்க இத்திருக்கோயிலை பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கு  வழங்க தமிழ்நாடு அரசு சட்டமன்ற அறிவிப்பு 2023-2024 அறிவிப்பு எண் -75,இன் படி ரூ,61-லட்சத்தில் திருப்பணிகள் நடைபெறவுள்ளது. 27-08-2023, ஞாயிற்று கிழமை அன்று காலை, 9-மணிக்கு மேல், 10.30-மணிக்குள் பாலாலயப்பெருவிழா நடைபெறவுள்ளது. வரலாற்று பதிவுகளை முறைபடுத்த வேண்டியுள்ளதாலும் அழகியல் நோக்கில் மெருகூட்ட வேண்டியுள்ளதாலும் நன்-கொடையாளர்கள் வரவேற்கப்படுகின்றனர்.  பஞ்சவன்மாதேவியின் வரலாற்று கருவூலமாக இத்திருக்கோயில் திகழ்வதால் வரலாற்று ஆர்வளர்கள் தங்களுடைய மேலான கருத்துகளைப் பதிவிட அன்புடன் வேண்டுகின்றோம். 

16
0
2
0
0
0