மத்திய கிழக்கு ஆசியாவில் கடந்த சில மணி நேரங்களாக வான்வழித் தாக்குதல்கள் மூலம் உச்சகட்டப் போரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் தற்காலிகப் போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நேரடித் தலையீடு மற்றும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, போரை நிறுத்தியுள்ளன.

இந்த அதிரடித் திருப்பத்தைத் தொடர்ந்து, வளைகுடா பகுதியில் அமைதியைக் கொண்டு வருவதற்கான இறுதி இலக்கை நெருங்கிவிட்டது என்றும், அனைத்து தரப்பினரும் அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அமைதிப் பேச்சுவார்த்தையின் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார்.

Shehbaz Sharif லெபனானின் பெய்ரூட் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் நேற்று இரவு இஸ்ரேலின் வடக்கு பகுதியை நோக்கிக் கடுமையான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலையில் ஈரானின் காருண் பெட்ரோகெமிக்கல் ஆலை மற்றும் முக்கிய ராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்தது.

இந்தத் தொடர் தாக்குதல்களால் உலகப் போர் மூளும் அபாயம் ஏற்பட்ட சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், "இரு தரப்பும் உடனடியாக ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்; அமைதிப் பேச்சுவார்த்தைகள் தடையின்றித் தொடர வேண்டும்" என்று இரு நாடுகளுக்கு தான் கேட்டுக்கொண்டு உள்ளதாக தெரிவித்தார்.

டிரம்பின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீதான தனது வான்வழித் தாக்குதல்களை முழுமையாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரேலிய காம்பேக்ட் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், "அதிபர் டிரம்பின் நேரடி வேண்டுகோளை ஏற்று, ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்துகிறது; ஆனால் லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான எங்களின் ராணுவ நடவடிக்கைகள் முழு பலத்துடன் தொடர்ந்து நீடிக்கும்" என்று இஸ்ரேல் நாட்டின் உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்குச் சில நிமிடங்களுக்கு முன்பாகவே, ஈரானிய ராணுவத்தின் மத்திய கட்டளைத் தலைமையகமும் இஸ்ரேல் மீதான தங்களின் ஏவுகணைத் தாக்குதல்களை முழுமையாக நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருந்தது. பெய்ரூட் மீதான இஸ்ரேலின் அத்துமீறலுக்கு மிகச் சரியான பதிலடி கொடுக்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள ஈரானிய ராணுவம், தற்போதைக்கு நாங்கள் எங்களின் தாக்குதல்களை நிறுத்துகிறோம். ஆனால், இஸ்ரேல் மீண்டும் லெபனான் மீதோ அல்லது எங்கள் நாட்டின் மீதோ தனது ராணுவ தாக்குதலை தொடர்ந்தால், இதைவிடப் பலமடங்கு கடுமையான எதிர்த்தாக்குதலை ஈரான் தொடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான இந்தத் திடீர் தற்காலிகப் போர் நிறுத்தம் குறித்துத் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் மிக முக்கிய அறிக்கை ஒன்றை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ளார். ஒரு பலவீனமான போர் நிறுத்தம் எவ்வளவு ஆபத்தானது என்பதை இன்றைய தாக்குதல் நிகழ்வு நினைவூட்டுவதாக அவர் கூறினார். போர் நிறுத்தம் என்பது உறுதியான முறையில் கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்கும் வகையில் இருக்க வேண்டும் என அறிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா - ஈரான் மத்தியிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளின் இறுதி இலக்கு நெருங்கி விட்ட நிலையில், அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும், வன்முறைக்குப் பதிலாக அமைதி மற்றும் பேச்சுவார்த்தை பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார்.
0
0
0
0
0
0