பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் பால் லிட்டருக்கு ரூ.32-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் அவர்களிடம் இருந்து இதர பால் பொருட்களும் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆவின் நிறுவனத்துக்கு வழங்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் ரூ.7 ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

இது தொடர்பாக ஆவின் பொது மேலாளர் சாந்தி, நேற்று பால் உற்பத்தியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது 3 மாதங்களுக்கு முன்பு தான் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி இருப்பதால் இப்போது ஊக்கத் தொகையை அதிகரிக்க முடியாது என்று அவர் கூறினார். இதன் காரணமாக பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. 

இந்நிலையில் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் பால் உற்பத்தியாளர்கள் வருகிற 17-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனால் ஆவின் பால் வினியோகத்தில் அடுத்த வாரம் முதல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. 

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க துணைத் தலைவர் எம்.கோவிந்த பாண்டியன் கூறியதாவது:
கடந்த ஆண்டு ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த அரசுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால் ரூ.3 மட்டுமே உயர்த்தியுள்ளனர். ஆவின் பால் புதிய விலைப்பட்டியல் வெளியிட்ட உடனே தனியார் நிறுவனங்கள் தீவன விலையை அதிகரித்தன. இதனால் பால் பண்ணையாளர்கள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். பலர் தற்போது ஆவினுக்கு பால் சப்ளை செய்வதை நிறுத்தி விட்டு ரூ.42 முதல் ரூ.46 வரை கொடுக்கும் தனியார் நிறுவனத்தை நாடியுள்ளனர். எனவே எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் வருகிற 17-ந்தேதி முதல் மாநிலம் தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

0
0
0
0
0
0