கும்பகோணம்: வாகன ஓட்டிகள் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வலியுறுத்தி கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை இன்று (பிப்ரவரி 14) துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ்குமார் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாபெரும் விழிப்புணர்வு இருசக்கர வாகனப்பேரணி நடைபெற்றது. போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சரவணக்குமார் அவர்களின் ஒருங்கிணைப்பில் பேரணி சிறப்பான முறையில் நடைபெற்றது. 



வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவர், மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் திருமதி.சண்முகப்ரியா அவர்கள் விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.பூர்ணிமா, துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம், தாலுக்கா காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், பட்டீஸ்வரம் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலைய காவலர்கள் இப்பேரணியில் பங்குபெற்றனர்.



முன்னதாக, ஆர்வமுள்ள அனைவரும் பங்குபெற வேண்டுமென கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டதை அடுத்து கும்பகோணம் ரெட் கிராஸ், இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தினர், ரோட்டரி கிளப், தன்னார்வ அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கு பெற்றவர்களுடன் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ்குமார் அவர்களும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்றதைக் கண்டு அனைவரும் உற்சாகமடைந்தனர்.



துணை காவல் கண்காணிப்பாளர் பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அதனைத்தொடர்ந்து தலைக்கவசம் அனியாமல் வாகனம் ஓட்டி சென்ற சிலருக்கு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ்குமார் அவர்கள் ஹெல்மெட் வழங்கி அதன் அவசியத்தை வழியுறுத்தினார். இறுதியாக பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் காவல் துறை ஏற்பாட்டில் பழரசம் வழங்கப்பட்டது.
1
0
0
0
0
0