தஞ்சாவூர்: திருவையாறில் உள்ள கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சமாதிக்கு ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 176-வது ஆராதனை விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இதனை தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 700-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பாடல்கள் பாடியும், இசைத்தும் தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வந்தனர். விழாவின் கடைசி நாளில் தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்பம் பகுள பஞ்சமி நாளை முன்னிட்டு காலை 5 மணிக்கு சவிதா ஸ்ரீராமின் புல்லாங்குழல் இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து வயலின், மிருதங்கம், நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. 

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 7.45 மணிக்கு விழாவை தொடங்கி வைத்தார். அவருக்கு சபா சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் தியாகராஜர் சுவாமிகளை வழிபட்டு தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து விழா மேடையில் சிறப்புரையாற்றிய ஆளுநர், இசை நிகழ்ச்சிகளையும் ரசித்து பார்த்தார். 

இந்நிகழ்வில் தியாகபிரம்ம மஹோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

0
0
0
0
0
0