கும்பகோணம் அடுத்த சுவாமிமலை அருகில் பல மாதமாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையானது சோழர்கள் காலத்தில் வணிகத்திற்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டதாகவும், மதுரையை எரித்த கோவலனின் மனைவி கண்ணகி பூம்புகாரிலிருந்து மதுரைக்கு நடந்து சென்றதாக சொல்லப்படும் வரலாற்று சிறப்புமிக்க சாலையை அடைத்து போடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சுவாமிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருவதாகவும், இது அடைக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு சிரமமாகவும், இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்து பல பகுதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுவாமிமலை வழியாக கும்பகோணம் செல்லும் அனைத்து வாகனங்களும் நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாதங்களுக்கு முன் பொதுமக்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால், சாலையை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், இந்த சாலை அடைக்கப்படாமல் போடப்படும் என்று தெரிவித்ததால் போராட்டம் நடத்தவில்லை என்றும், ஆனால் தற்போது வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அடைக்கப்பட்டுள்ள பூம்புகார் சாலை திறக்கப்படவில்லை என்றும் தெரிவித்து,  SV.சொக்கலிங்கம், KR.வேல்முருகன் தலைமையிலும், KSR.விஜய் K.சாமிநாதன், காவேரி மணி முன்னிலையிலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவல் துறையினரும், அரசு அதிகாரிகளும் போராட்டம் நடத்தியவர்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க உயர் அதிகாரிகள் கொடுத்த உத்தரவாதத்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
2
0
1
0
0
0