கேரளாவில் பன்றி காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ குழுக்கள் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. 

கேரள எல்லையில் அமைந்துள்ளது தேனி மாவட்டம். கேரளாவை இணைக்கக்கூடிய குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய வழித்தடங்களில் போக்குவரத்து அதிகம் இருக்கும். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் விவசாயம் அதிகம் நடைபெறுவதால் தேனி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் ஜீப்புகளில் சென்று அங்கு வேலை செய்து திரும்புகின்றனர்.


இந்நிலையில், கேரள மாநிலத்தில் தற்பொழுது பன்றிக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால் ஏராளமானோர் பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் தமிழக- கேரள எல்லையான தேனி மாவட்டம் போடிமெட்டு மற்றும் முந்தல் சோதனை சாவடிகளில் சுகாதாரத் துறையினர் மருத்துவக் குழுக்கள் அமைக்காமல் கேரளாவில் இருந்து வருபவர்களை கண்காணிக்காமல் இருப்பதாகவும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே சுகாதாரத் துறையினர் போடி மெட்டு மற்றும் முந்தல் சோதனைச் சாவடியில் உடனடியாக மருத்துவ குழுக்கள் அமைத்து கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி அவர்களுக்கு பன்றிக் காய்ச்சலுக்கான ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா என கண்டறிந்து பின்பு தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

கேரளாவில் கடந்த மாதம் முதல் டெங்கு, எலி, வைரஸ் காய்ச்சல்களால் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மலப்புரம் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.

1
0
0
0
0
0