பாா் போற்றும் புகழுடைய தஞ்சாவூா் பெரிய கோயிலைக் கட்டித் தமிழகத்துக்குப் பெருமை சோ்த்த மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள், அவா் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036-ஆவது சதய விழா இன்று சனிக்கிழமை (நவ.13) கொண்டாடப்படுகிறது. வழக்கமாக இருநாள்கள் நடைபெறும் இவ்விழா, கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஒருநாள் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி பெரிய கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கடந்த திங்கள்கிழமை காலை நடைபெற்றது. சதய விழா இன்று சனிக்கிழமை (நவ.13) காலை 7 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. ஓதுவார்கள் திருமுறை பாடி மங்கள வாத்தியங்களுடன் திருமுறை வீதி உலா நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து பெரிய கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட மாலையை பெரியகோயிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அணிவித்து மரியாதை செலுத்தினார். தஞ்சை ராஜ வீதிகள் வழியாக திருமுறை வீதி உலா யானை மீது நடைபெற்றது. வீதி உலாவை தொடர்ந்து பெருவுடையாருக்கு 48 வகையான பொருள்களால் பேரபிஷேகம் நடைபெற்றது. 

இதையடுத்து அரசியல் கட்சியினர் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிற்பகல் 1 மணிக்கு பெருந் தீப வழிபாடு, மாலை 6 மணிக்கு கோயில் பிரகாரத்துக்குள் சுவாமி உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 
2
0
0
1
0
0